Breaking
Wed. Jan 15th, 2025

எ.எச்.எம்.பூமுதீன்

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை  தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊவாத் தேர்தலில் அரசின் சார்பாக போட்டியிட கெஞ்சிக் கூத்தாடியும் கூட ஒரு முஸ்லிமேனும் முன்;வராமையை மூடி மறைப்பதற்காகவே அரசின் அமைச்சர் ஒருவர் இந்த அபாண்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தில் கிரிந்தியெல்ல , மகாதென்ன, அலுகொல்ல ஆகிய முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்; அமைச்சர் உரையாற்றினார். அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

ஊவா மாகாண சபையில் கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் பிரதிநித்துவம் இல்லாமை குறித்து மிகவும் வேதனை அடைகின்றேன். அந்தக் கவலை அந்த வேதனை இத்தேர்தலின் மூலம் இல்லாமலாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் இங்கு ஏற்பட்டு வரும் ஒற்றுமையாகும்.

ஊவாத் தேர்தலில் இருபெரும் தேசியக் கட்சிகள் போட்டியிடுவதென்பது  அது அவர்களது அரசியல் தேவைகளுக்காவே. ஆனால் எமது முஸ்லிம் கட்சிக் கூட்டமைப்பு போட்டியிடுவதென்பது எமது சமுகம், இஸ்லாம் ,புனிதக் குர்ஆன் இங்கு வாழும் இளைஞர் யுவதிகளின் பாதுகாப்புக்காகவே என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ஹலால் ,ஹபாயா, பள்ளிகள் மீதான தாக்குதல் எனத் தொடரும் நாசகார குழுவொன்றின் கொட்டத்தை அடக்க ஒன்று பட வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கெல்லாம் செப்டம்பர் 20ஆம் திகதி சாட்டை அடி கொடுக்கின்ற  ஒரு ஜனநாயக வழிமுறையாகவே நான் இந்த ஊவாத் தேர்தலை பார்க்கின்றேன்.

அரசுக்கு உறுப்பனர்களை பெற்றுக்கொடுக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை என்பதை இங்குள்ள ஊவா முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான போலிப் பிரச்சாரங்களையே கடந்த மேல்மாகாண சபைத் தேர்தலின் போதும் அரசு கட்டவிழ்த்துவிட்டிருந்தது. எனினும் அந்தப் போலிப் பிரச்சாரங்களை எல்லாம் தகர்த்தெறிந்து தனித்து போட்டியிட்ட எமக்கும் மு.கா விற்கும் மக்கள் ஆணை வழங்கினார்கள்.

நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளையும் ,சொத்துக்களையும் புனித குர்ஆனையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை நான் பார்க்கின்றேன்
மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைப்பட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் மிகுந்த சந்தோசத்திற்கு உட்படுத்தியுள்ளது.

எனினும் இந்த ஒற்றுமையை சிதைக்க பல முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். இந்த நாசகார சதிகளுக்கு எவரும் உடந்தையாகி விடக்கூடாது.

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை மூலம் இரண்டு ஆசனங்களைப் பெறும் நல்ல சூழல் தோன்றியுள்ளது.

பதுளை முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டு வரும் ஒற்றுமை இந்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக பார்க்கப்படும் ஒன்றாக மாற்றம் அடைந்துள்ளது செப்டம்பர் 21ம் திகதி எமது முஸ்லிம் கூட்டமைப்புக்கு கிடைக்கும் பெறுபேறு – முஸ்லிம்கள் குறித்த தீர்க்கமான முடிவை சம்பந்தப்பட்டோர் அவசரமாகவும் அவசியமாகவும் எட்டிக் கொள்வதற்கு வழிஏற்பட்த்தியுள்ளது.

இதனை சிதைக்க எவரும் முயற்சிக்க வேண்டாம். அவ்வாறானவர்களை அச்சதி நடவடிக்கைளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

அரசைப் பாதுகாக்க ,ஊவா மாகாண ஆட்சியை அரசுக்கு பெற்றுக் கொடுக்க நாங்கள் இங்கு போட்டியிட வில்லை. அவ்வாறான அபத்தமான பொய்களைக் கூறி இந்த ஒற்றுமையை சீர்குலைக்க இங்கு அமைச்சர் ஒருவரும் ஐ.தே.கவும் முயற்சிப்பது வேதனையை ஏற்படுத்துகின்றது.
பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் கௌரவம் ,உரிமை, பாதுகாப்பு என்பதற்கு கிடைத்த ஒரு வழியாகவே நான் பார்க்கின்றேன்.

அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் துறந்து இந்த ஊவா முஸ்லிம் சமுகத்திற்காக ஒன்றுபட்டிருக்கின்றோம்.
மு.கா வேட்பாளரா, அ.இ.ம.கா வேட்பாளரா அல்லது இக்கூட்டில் போட்டியிடும் வேறொருவரா வெற்று பெறுவது என்பது அல்ல பிரச்சினை. கலிமாச் சொன்ன எமது வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.

பதுளை மாவட்ட முஸ்லிம்களுக்காக பேசுவதற்கு ,தைரியமாக குரல் கொடுப்பதற்கு, தலைமை தாங்குவதற்கு அனைவரையும் ஒன்று படுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் குறிபபிட்டார்.

Related Post