Breaking
Mon. Dec 23rd, 2024

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் –

இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார்.

உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LLRC கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முதல் 2009 யுத்த நிறைவு வரை இடம் பெற்ற விவகாரங்கள் குறித்தே ஆராய்ந்து சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது.

குறிப்பிட்ட ஆணைக்குழுவில் கூட முஸ்லிம் சமூகம் சார்பாக முறையான சாட்சியங்களை முன்வைக்கவோ அல்லது அது முஸ்லிம்களது விவகாரங்களை உள்வாங்க போதுமானதல்ல என்பதனை வலியுறுத்தவோ எந்தவொரு முஸ்லிம் கட்சிக் காரரும் முன்வரவுமில்லை, சரவதேச அரங்கில் சமர்ப்பிக்கத் தராதரம் கொண்ட எத்தகைய ஆவணங்களை தயாரிக்கவோ, தரவுகளை திரட்டவோ இல்லை.

குறிப்பாக மாவில் ஆறு ( 2006) யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு (2009) முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து LLRC அதிவிஷேட கவனம் செலுத்துகின்றது.

தமிழர்கள் விடயத்தில் பாரிய அளவில் சர்வதேச அழுத்தங்கள் இருப்பதனால் சிபாரிசுகளை அமுல் நடத்துவதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம், மீள் கட்டமைப்பு, புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், இன நல்லிணக்கம், காணிகளை மீட்டுக் கொடுத்தல், வீடுகளை கட்டிக் கொடுத்தல், உள்கட்டமைப்பு அபிவிருத்தி என பல்வேறு கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

வட கிழக்கு வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 கைச்சாத்திடப்பட்டது முதல் 2009 யுத்தம் நிறைவுறும் வரையும் குறிப்பாக 2002 மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சத்தப் படுகின்ற வரையும் பாரிய உயிர் உடமை காணி இழப்புக்களை சந்தித்ததோடு ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர், வட கிழக்கு எங்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வடபுல முஸ்லிம்களின் காணிகள் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் வன பாதுகாப்பு அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன, மறிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் இதற்கு போதிய உதாரணமாகும். கிழக்கில் புல்மோட்டை முதல் பொத்துவில், தீகவாபிய வரை முஸ்லிம்களது காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மூன்று தசாப்தகாலமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது விவகாரங்களை ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து நிவாரணம் வழங்குகின்ற தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளையுடைய ஆணைக்குழு ஒன்றை 1987-2009 வரையிலான காலப்பகுதியை மையப்படுத்தி அமைக்க தவறியுள்ளன.

அவ்வாறான ஒரு ஆணைக்குழுவை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினதும், ஜனாதிபதிகளினதும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இன்று வரை கோரி நிற்கவுமில்லை, போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மாற்றி ஈற்றில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற சரணாகதி அரசியலாக மாற்றிவிடும் கையாளாகா அரசியலையே அவர்கள் செய்து வருகின்றனர்.

Related Post