Breaking
Tue. Dec 24th, 2024

வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அவரின் மறைவின் பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனமான அரசியல் ஒன்றை செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுவில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் கலாநிதி ஜமீல் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது,

மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் நலனுக்காக எத்தனையோ விடயங்களை செய்துள்ளார். வடக்கு முஸ்லிம் அகதிகளுக்கும் அவரது பணி பரந்துபட்டிருந்தது.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் கருத்துக்களைப் பெறாது இரவோடிரவாக வடக்கும் கிழக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் இணைக்கப்பட்ட போது மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் உரிமைகளையும் இருப்புக்களையும் பாதுகாக்கும் நோக்கில் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இரண்டு பெரும்பான்மை அரசியல் சக்திகளுடனும் அவர் போராடினார். முஸ்லிம்களின் அரசியல் உரிமை தொடர்பில் அவர் சில கோரிக்கைளையும் முன்வைத்திருக்கின்றார். இதுவே உண்மை.

தற்போது நீதிமன்ற தீர்ப்பின்படி வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கின்றது. பிரிந்திருக்கும் வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டுமென்று சில அரசியல் சக்திகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. தனது சமூகத்தின் நலனை பாதுகாக்கும் வகையிலேயே அவர்கள் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் முஸ்லிம்காங்கிரஸ் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. மௌனம் காத்துவருகின்றது. அந்த மௌனத்தின் மூலம் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு உத்வேகத்தை வழங்குகின்றனர். இது தான் wஅமது ஆபத்தானது.

அது மட்டுமன்றி அதிகாரப்பகிர்விலும், அரசியலமைப்பு மாற்றத்திலும், தேர்தல்முறை மாற்றத்திலும் இவர்களின் நிலைப்பாடு தான் என்ன? மக்கள் காங்கிரஸை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டொன்றை கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிலும் நாம் துணிந்து எமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். ஐ நா உயரதிகாரிகளிடமும் மேற்குலக இராஜதந்திரிகளிடமும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாதென்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினோம்.

மெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் அம்பாறை பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க எந்தவிதமான அபிவிருத்தியும் இடம்பெறவில்லையென்பதை நானும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கண்களால் கண்டோம்.

எங்களை சந்தித்த வயோதிபர்களும் ஏழைத்தாய்மார்களும் தங்கள் துயரங்களை எடுத்துக்கூறிய போது உண்மையில் வேதனையாக இருக்கின்றது.

இந்தப் பிரதேசத்தில் எமது கட்சிக்கு பாராளுமன்றத்திலோ மாகாணசபைகளிலோ பிரதிநிதித்துவம் இல்லாத போதும் கடந்த தேர்தலில் எங்களை நம்பி வாக்களித்த மக்களை கைவிடமாட்டோம். இந்தப்பிரதேசத்தில் நாங்கள் மேற்கொள்ளும், மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்திக்கு பாரிய தடைக் கல் போடுகின்றனர்.

இத்த்னை வருடகாலம் தூங்கிக்கிடந்தவர்கள், நாங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்கும் போது முண்டியடித்துக் கொண்டு அந்த பிரதேசத்திற்குச் ஓடிச்செல்வதிலும் பத்திரிகைக்கு அறிக்கை விடுவதிலும் முனைப்புக்காட்டுகின்றனர்.

மக்கள் காங்கிரஸின் அம்பாறை வருகை இவர்களை இப்போதுதான்  தட்டியெழுப்பியுள்ளது.

அமைச்சர் பைஸர் முஸ்தபா சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றுள்ள போதும் இந்தப் பிரதேசத்தின் சூழலுக்கேற்ப தமிழ் மொழியிலே மிகவும் அழகாகப் பேசினார். சாய்ந்தமருது நகரசபை அறிவிப்பை அவர் மிக விரைவில் வெளியிட்டு உங்களின் ஏக்கத்தை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

14606245_1452356521447205_6192716553034776160_n 14656360_1452356491447208_7227950542423116478_n 14798823_663456837153698_1443768666_n

By

Related Post