-முபாறக் அப்துல் மஜீத்-
கல்முனை உள்ளூராட்சி சபையை 94ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தும் இன்று வரை கல்முனையையும் நாசமாக்கி கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களையும் பிரித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனையின் எதிர் கால நன்மையையும், முஸ்லிம்களின் இருப்பையும் கருத்திற்கொண்டு இத்தேர்தலில் வாபஸ் வாங்கி புதிய முஸ்லிம் கட்சியொன்றுக்கு அனைத்து முஸ்லிம்களும் வாக்களிக்க வழி விடுவதே இது வரை காலமும் அக்கட்சி கல்முனைக்கு செய்த அநியாயங்களுக்கு பிரயச்சித்தமாகும். இன்றுள்ள நிலையில் கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரசால் தனித்து வெல்ல முடியாது என்பதை அக்கட்சி ஆதரவாளர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாய்ந்தமருது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செய்த அநியாயம் காரணமாக இன்று அம்மக்கள் தனியாக சுயேற்சையில் போட்டியிடுவதால் அவர்கள் ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க உதவ மாட்டார்கள். காரணம் அவ்வாறு உதவினால் சாய்ந்தமருது இன்றி கல்முனையை முஸ்லிம்கள் கைப்பற்ற முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்குவது கல்முனைக்கு ஆபத்து என்ற மு. காவின் கருத்து உறுதியாகி விடும்.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்யுமா என்றால் அதற்கு நிறையவே இடமுண்டு. காரணம் மு. கா தலைவர் தமிழ் கூட்டமைப்பின் அத்தனை தாளத்துக்கும் ஆடுபவர். இவ்வாறு செய்தால் அது கல்முனை முஸ்லிம்களை காட்டிக்கொடுத்ததாகவே முடியும் என்ற கருத்து இருந்தாலும் இத்தகைய காட்டிக்கொடுப்புக்களும் அவற்றை சமாளித்தலும் மு. காவுக்கு புதிய ஒன்றல்ல. தமிழ் முஸ்லிம் உறவை காக்க வேண்டும் என்பதற்காக இணைந்து ஆட்சி செய்யப்போகிறோம் என்பார்கள். இதற்கும் ஒரு ஏமாந்த போராளி நாரே தக்பீர் என்பான். அதன் பின் வருகின்ற கல்முனைக்கான ஆபத்துக்களின் போது வேறு கட்சிகள் மீதும் சாய்ந்தமருதின் மீதும் மு. கா பழி போட்டு தப்பிக்க பார்ப்பார்கள்.
இந்த சூழலில் கல்முனை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்று சிந்திக்க வேண்டும்.
காலாகாலமாய் கல்முனை முஸ்லிம்கள் மத்தியில் தமிழன் ஆட்சியை பிடிப்பான் என்ற இனவாதத்தையும் சாய்ந்தமருதான் மேயரா கல்முனைக்குடியான் மேயரா மருதமுனையான் மேயரா என்ற ஜாஹிலிய்யா கால பிரதேச வாதத்தையும் கிளப்பி கல்முனயின் ஆட்சியை பிடித்து கல்முனையை சீரழித்த, அதனை கொள்ளையிட்டு ஏப்பம் விட்ட முஸ்லிம் காங்கிரசுக்கு மீண்டும் வாக்களித்து கல்முனையை தமிழ் கூட்டமைப்பிடம் கொடுக்க உதவுவதா? அல்லது கல்முனையின் அதிகாரம் இல்லாத நிலையிலும் கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டி முனை என அனைத்து ஊர்களுக்கும் உதவி வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
தீயது என்று தெரிந்து கொண்டே தீயதுக்கு ஆதரவு கொடுப்பது புத்திசாலித்தனமானதல்ல.