தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஹலீம்
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு தனது அறிக்கையை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவிடம் சமர்ப்பித்ததும் அதன் பிரதிகள் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களது கருத்துகளும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்பே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில்
வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு அவ்வறிக்கையை தமது பார்வைக்கு சமர்ப்பிக்கும் படி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள்.
தமது கருத்துகளையும் சிபார்சுகளையும் உள்வாங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்கள்.
இதனடிப்படையில் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையின் பிரதிகள் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். பல முன்னணி முஸ்லிம் பெண்கள் அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் தமது ஆலோசனைகளையும் கருத்துகளையும் எம்மிடம் சமர்ப்பித்துள்ளன.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக தற்போதைய அரசினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு சலீம் மர்சூபின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள திருத்தங்களையும் ஏனைய அமைப்புகள் முன்வைத்துள்ள திருத்தங்களையும் கவனத்திற் கொண்டு இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும். திருத்தங்கள் குர்ஆன் ஹதீஸ் மற்றும் ஷரீஆவுக்கு உட்பட்டதாகவே அமையும். உலமாக்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும். இச்சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது என்றார்.
(நன்றி – VIDIVELLI)