முஸ்லீம் சமுகத்தினை தொடர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்து அந்தச் சமுகத்தின் பொறுமையைச் சோதிக்க, இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அளுத்கமையில் முஸ்லீம் வர்த்தகருக்குச் சொந்தமான நிலையமொன்று எரிப்பு முடிந்து சூடு தனிவதற்கு முன்னரே மாவனல்லையில் மற்றுமொரு முஸ்லீம் வர்த்தகரின் ஹாட்வெயார் கடை ஒன்றை எரித்துள்ளனர். ஏனைய இனங்களுடன் சகோதரத்துவமாக வாழநினைக்கும் முஸ்லீம் சமுகத்தின் மீது பொதுபலசேனா இயக்கம் ஏன் இவ்வாறான காழ்ப்புணர்வுடன் செயல்படுகின்றது. இந்த இயக்கம் கடந்த 3 வருடகாலமாக இயங்கி இந்த நாட்டில் உள்ள பௌத்த மக்கள் குறிப்பாக பௌத்த இளைஞர்கள் மத்தியில் முஸ்லீம்கள் பற்றி தப்பிப்ராயங்களை ஏற்படுத்தி அவர்களை தூண்டி விடுகின்றது.
முஸ்லீம்களின் ஹலால் உணவில் ஆரம்பித்து தற்பொழுது பொருளாதாரத்தை அழிப்பதில் இந்த சேனாக்கள் உக்தியைப் பாவிக்கின்றார்கள். இவர்கள் என்னதான் பழிகள் தீர்த்தாலும் வல்ல இறைவனை நம்பி வாழும் முஸ்லீம்கள் இவர்களுக்கு ஒருபோதும் பயப்படப்போவதில்லை. இவர்கள் முஸ்லீம், பௌத்த இனக் கலவரத்தை உண்டுபண்னுவதற்கும் அதில் அவர்கள் குளிர்காய நினைப்பதுமே இவர்களது நிகழ்ச்சி நிரல்கள் ஆகும்.
முஸ்லீம் சமுகத்தின் மீது தொடர்ச்சியாக வன்முறைகளையும் காழ்ப்புணர்வுக் கருத்துக்களையும் விதைத்து வரும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எல்லையை மீறி வருகின்றன. முஸ்லீம் சமுகத்தினை குறிவைத்து தாக்குதல்களைக் கொண்டுள்ள இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் அரச மேல்மட்டம் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த அடாவாடித் தனங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு உறுதியளித்த போதும் அது உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் நாங்கள் அரசுடன் இணைந்து தாய்நாட்டு பற்றுடன் செயற்படும்போது இவ்வாறன செயல்கள் மூலம் எமது சமுகம் எங்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கும்போது பதிலளிக்க முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.
வடக்கில் புலிகள் முஸ்லீம் சமுகத்தின் மீது கட்டவிழ்த்த செயற்பாடுகளை விஞ்ஜிய நிலை இன்று பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சட்டத்தையும் ஒழுங்கையும் இவர்கள் கையில் எடுத்து கொண்டு காட்டுத் தர்பாருடன் இந்த இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கௌரவமான காவியுடை தரித்துக் கொண்டு இனவாதத்தை கக்கி வரும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு தீர்க்கமாணதொரு முடிவு வேண்டும்.
தமிழர்களில் ஒரு சிலரோ அல்லது முஸ்லீம்களின் ஒரு சிலரோ இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும். இக் கால கட்டத்தில் பெரும் பாண்மை இனத்தின் ஒரு பிரிவினர் இந்த அடாவடித்தனங்களில் ஈடுபடும்போது மட்டும் அரசோ அல்லது இந்த நாட்டில் உள்ள மாகா சங்கத்தினர்கள் மௌனம் ஏன் ? இதன் பின்ணனி என்ன?