Breaking
Tue. Dec 24th, 2024

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புக் காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அளுத்கமயில் உள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தொடர்ந்தும் குறிப்பிடும்போது

குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வர்த்தகர்களே இனவாத கும்பலை துாண்டிவிட்டு இந்த செயலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் சில பௌத்த பிக்குகள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வர்த்தக நிலையம் எரிந்துள்ளது என்றால்  இது திட்டமிடப்பட்ட சதியாக இருப்பதற்கு பலமான சாத்தியக் கூறு இருக்கின்றது.

இலங்கையின் காவல் துறையினர் நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு சிக்கலான குற்றச் செயல்களைக் கூட கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தமது திறமையினை வெளிப்படுத்திய பல சந்தரப்பங்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடாவடித்தனங்கள் அல்லது வன் செயல்கள் தொடர்பான குற்றவாளிகள் முழு நாட்டிற்கும் மட்டுமல்ல முழு உலகத்திற்குமே தெரிந்தாலும் இலங்கையின் காவல் துறையினருக்கு மாத்திரம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ் நிலை காணப்படுகின்றது.

எனது அமைச்சுக்குள் பொலிசாரின் கண்களுக்கு முன்னாலே புகுந்து காட்டு தார்பார் நடாத்திய,  நாட்டின் தொலைக்காட்சி நிலையங்களுக்கூடாக, முழு நாட்டிற்குமே அடையாளப்படுத்தப் பட்டவர்களை, இன்னும் நமது காவல் துறையினரால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். மட்டுமல்லாமல் எனது அமைச்சிற்குள் வைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளை திட்டியவர்களையே அவர்களால் அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

தெமடகொடயில் வைத்து மாட்டிறைச்சி ஏற்றி வந்த லொறியை தீயிட்டுக் கொழுத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 இற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வரை அடையாளம் காணப்பட வில்லை.

அதேபோன்று அளுத்கமவில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் பொலிஸாரால் குற்றவாளிகள் இனங்காணப்படாத மற்றுமொரு சம்பவமாக இந்த வரிசையில்  இடம் பிடிக்க அனுமதிக்க முடியாது.

பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு அரசு உரிய நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தம்புள்ள பள்ளிவாசல் கை வைக்கப்பட மாட்டாது என்று  அமைச்சு கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்தில் எமக்கு ஜனாதிபதியினால் தரப்பட்ட வாக்குறுதிக்கு மத்தியில் குறித்த ஒரு மத குருவின் அழுத்தம் காரணமாக அந்த பள்ளிவாசலின் இருப்பு மீண்டும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இவ்வாறான நிலமைகள் தொடர அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசுக்குள்ளிருந்து கொண்டு  நாம் போராடுகின்றோம். ஆனால் அரசு  வாய் வீச்சில் பிரச்சினை இல்லை என்று சொல்லிக்கொண்டு நாளாந்தம் முஸ்லிம்கள் இனவாத சக்திகளிடமிருந்து முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல் இருக்குமாயின், முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஜனநாயக சட்ட வரம்பிற்கு உட்பட்டு அரசுக்கு வெளியே நாங்கள் தேட வேண்டி ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post