Breaking
Mon. Dec 23rd, 2024

பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும்,முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்.; இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக அமைச்சர் ரிசாத்பதியுதீன் இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(24-05-2015)நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு ஆராதனை மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இரண்டாவது அமர்வாக நடைபெற்ற நற்பிட்டிமுனை சி.எம்.முபீத், சி.எம்.ஹலீம் ஆகியோர் கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் விசேட உரையாற்றிய போதே ஊடகவியலாளர் சலீம் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :- ஊடகவியலாளர்களான நாங்கள் பக்கசார்பின்றி எல்லா அரசியல் வாதிகளுக்கும் செய்திகளை எழுதி வருகின்றோம் ஆனாலும் சமூகத்திற்காகவும்,மக்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளைப்பற்றயும் பேசவேண்டியதுடன் ஊடக சமூகம் உறுதுணையாகவும் இருக்கவேண்டும்.

வில்பத்து குடியேற்றப் பிரச்சினையில் இனவாதிகள் அமைச்சர் றிஷாட் பதியுதீனையே குறிவைத்து அவர் முன்னெடுக்கிற பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்கள் இருந்த போதிலும் மக்கள் சேவைக்கான அவரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், பல தடைகளைத்தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்திலே இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயே குடியேற்றுவதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுவரும் அமைச்ர் ரிசாத் பதியுதீனின் சேவை பாராட்டாமல் இருக்க முடியாது.என ஊடகவியலாளர் சலீம் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் பணிப்பாளரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினரும்,அகில இலங்கை பக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சி.எம்.ஹலிம் ஆகியோர் கல்முனை மாநகர மக்களுக்கு ஆற்றிவரும் சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

இதில் லங்கா சதொச நிறுவனத்தின் பணிப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சி.எம்.முபீத், நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் ஆகியோரின் சேவைப் பாராட்டி சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸதீன,; பிரதித் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் பொன்னடை போர்த்த,சம்மேளனத்தின் பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்,உப தலைவர் எம்.ஏ.பகுறுதீன் ஆகியோர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.

நிகழ்வில் சம்மேளனத்தின் உறுப்பினர்களும், அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்களும்,பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Post