Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம்.காசிம்-

மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த சமூகங்களில், நாங்களும் உள்ளடங்குவோம். எனவே அரசாங்கம் கொண்டுவருகின்ற எந்தவொரு தீர்வும் எங்களை பாதிக்கவும் கூடாது, எங்கள் விருப்புக்கு மாற்றமாகவும் அமையக் கூடாது. அவ்வாறான தீர்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், அவரது தலைமையிலான அரசியலமைப்பு சபையிடமும் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம் என்பதை இந்த இடத்தில், பிரதமர் முன்னிலையில் மீண்டும் நினைவூட்டி உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ஓட்டமாவடியில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஏனைய கட்சிகளைப் போன்று அரசியல் தலைவர்களிடம் ஒரு முகத்தையும், மக்களிடம் இன்னொரு முகத்தையும் நாங்கள் காட்டுபவர்கள் அல்லர். வடக்கும், கிழக்கும் சேர்ந்துவிடக் கூடாது என்பதில், எமது கட்சி உறுதியாக இருக்கின்றது எனவும், அதுவே எமது கொள்கை எனவும் பிரதமர் வீற்றிருக்கும் இந்த மேடையில் வைத்து, நான் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகின்றேன்.

எமது கட்சியான மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும், நெருக்கடிகளையும் தீர்த்து வைப்பதற்கான செயற்பாட்டில் தெளிவான பாதையில் பயணித்து வருகின்றது.

எமது சமுதாயம் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டும், ஏனைய பிரதேசங்களில் பரவலாக வாழும் முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டும் பணியாற்றி வருகின்றது.

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்படுவதன் மூலமே, சவால்களை முறியடித்து வெற்றிகளைப் பெறமுடியும் என்பதிலும் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது. கல்விமான்கள், உலமாக்கள், மக்கள் அனைவரும் இந்த விடயத்தை உணர்ந்து ஒற்றுமைப்பட்டு, எமது கரத்தையும், கட்சியையும் பலப்படுத்தி, பிரதமருக்கும் அரசுக்கும் எமது உள்ளக்கிடக்கைகளை தெரியப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பதினேழு வருடங்களாக சமுதாயத்துக்காக அரசியல் செய்கின்றோம் எனக் கூறுவோர், உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவுமில்லை, அபிவிருத்திகளை மேற்கொள்ளவுமில்லை என்பதை நீங்கள் உணர்வீகள். தீர்வு முயற்சிகளிலும் எந்தக் காத்திரமான பங்களிப்பும் நல்கவில்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் நாங்களும் அங்கம் வகிக்கின்றோம். அவர்களும் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், முஸ்லிம்கள் உள்ளடங்கிய சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான எந்தக் காத்திரமான பங்களிப்பையும் நல்கவில்லை.

ஆனால், சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எவ்வகையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை, வழிகாட்டல் குழுவுக்கு மக்கள் காங்கிரஸ் மிகவும் தைரியமாக வழங்கியுள்ளது.

கோஷங்களுக்கும், பாட்டுக்களுக்கும் நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். இந்தச் சமூகத்தை மடையர்களாக நினைத்து அரசியல் செய்து வருபவர்களுக்கு, நீங்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்ட வேண்டும். நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.

சமுதாயம் எதிர்நோக்கும் ஆபத்துக்களை தடுப்பதற்கான எமது துணிச்சலான முயற்சிகளுக்கு, நீங்கள் வாக்குகள் மூலம் உரமூட்டுங்கள். இந்தத் தேர்தலை அதற்கான மக்கள் ஆணையாகப் பயன்படுத்துங்கள். பொத்துவில் தொடக்கம், புல்மோட்டை வரையிலான நமது மக்களுக்கான காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலனத் திணைக்களம் ஆகியவற்றுக்கு நம்மவர்களின் பூர்வீகக் காணிகளை உரித்துடமையாக்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தின் காணிப்பிரச்சினை உட்பட இன்னும் பல பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி, நாங்கள் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள எமது கரத்தைப் பலப்படுத்துங்கள்.

நமது மக்களின் எந்தப் பிரச்சினைகளுக்கும் இற்றைவரை தீர்வு கிடைக்காத அவல நிலையே இன்னும் தொடர்கின்றது. வீடில்லாப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் எவற்றையுமே, கடந்த காலத்தில் பிரதேசத்தில் அரசியல் செய்த கட்சிகள் தீர்க்கவில்லை.

முஸ்லிம் சமூகம் தன்மானத்துடனும், கௌரவத்துடனும் தலைநிமிரிந்து வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்குமான காத்திரமான திட்டங்களை வகுத்து நாங்கள் செயற்படுவோம். எமது சமூகத்தின் பங்கினை பெற்றுக்கொள்வதில் எவ்விதமான விட்டுக்கொடுப்பும் இருக்காது. மாற்றத்துக்கான இந்த அரசியல் நீரோட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

கல்குடா மண்ணின் மைந்தனான பிரதி அமைச்சர் அமீர் அலி, இந்தப் பிரதேச அபிவிருத்திகளுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமை மற்றும் விடிவுக்காக எம்முடன் இணைந்து பயணிக்கின்றார்.

அவருடைய கரத்தை நீங்கள் பலப்படுத்துவதன் மூலம், இந்தப் பிரதேசத்தில் பொருளாதார மேம்பாட்டையும், வளர்ச்சியையும் பெற்றுக்கொள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

 

 

 

Related Post