(அமைச்சின் ஊடகப்பிரிவு)
அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை உசுப்பிவிடுதன் மூலம் தங்கள் இலக்கினை அடைவதற்கு முயற்சிப்பதாகவும்; அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்..
குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்கடர் ஷாபி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரசின் மாவட்ட முக்கியஸ்தர்களான நஸீர், அஸார்தீன், அன்பாஸ் அமால்தீன் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
முஸ்லிம்களை ஊடகங்களில் ஏளனஞ்செய்வதையும், விமர்சிப்பதையுமே தமது தொழிலாகக் கொண்டு ஒரு கூட்டம் இயங்கிவருகின்றது. நமது இறைவேதமான குர்ஆனைக் கையிலெடுத்துக் கொண்டு ஊடகங்களில் குர்ஆன் வசனத்துக்குரிய விமர்சித்து வரும் துர்ப்;பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக நமது சமூகத்தின் மீதும், நமது மார்க்கத்தின் மீதும் இவர்கள் வசைபாடிவருவதிலேயே இவர்கள் இன்பம் கண்டுவருகின்றனர். இவ்வாறு எங்களுக்கெதிரான செயற்பாடுகளை கைவிட்டுவிடுங்களென நாம் கூறினால் எம்மைப் பொல்லாதவர்களாக சித்தரித்து இனவாதியாக் காட்ட முயற்சிக்கின்றனர். இவர்களது அநியாயங்களையெல்லாம் தட்டிக் கேட்காமல் பெட்டிப்பாட்பாக இருந்தால் நல்லவர்களென்று புகழாரம் சூட்டுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை காட்டையழிக்கும் சமூகமாகவும் வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்களை இங்கு கொண்டுவந்து அரபுக் கொலணிகளை இங்கே உருவாக்கும் ஒரு சமூகமாகவும் வெளியுலகத்திற்கு ஒரு மாயையைக் காட்டுகின்றனர்.
சாதாரணமாக இயல்பான வாழ்க்;கை நடாத்தும் கிராமமொன்றில்கூட காடுகள் வளரத்தான் செய்கின்றன. அதுதான் இயல்பும்கூட. 26 வருடங்களாக மக்கள் வாழாத கிராமமொன்று எவ்வாறு இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். எனவே அங்கேயுள்ள இடங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டித் துப்பரவு செய்தால் காடழிக்கும் சமூகமாக முத்திரை குத்துகின்றன. இற்றைவரை இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு மீளக் குடியேறுவதற்காக அரசாங்கம் ஒரு வீட்டைக்கூட தரவில்லை. அரபு நாடுகளிடமும், வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் எங்களது துயரத்தை கூறி நாம் பெற்றுக் கொண்ட வீடுகளை ஆகாயத்தில் இருந்து படமெடுத்து நாங்கள் தவறு செய்ததாக சித்தரிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு மட்டுமே நான் வீடு வழங்கியதாக என் மீது விரல் நீட்டுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரம் நான் வீடுகளை வழங்கவில்லை. முசலிப் பிரதேசத்திலுள்ள முள்ளிக்குளத்தில் வாழும் கிரிஸ்தவ மக்களுக்கும், சிங்கள கம்மானையில் வாழும் சிங்கள மக்களுக்கும் நான் வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றேன்.
முஸ்லிம்கள் புத்திசாதூர்யமாக வாழ வேண்டிய ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை சரியாக வழிநடாத்தும் பொறுப்பை சுமந்துள்ளனர். உலமாக்கள் சமுதாயத்தை வழிநடாத்தும் பாரிய கடப்பாட்டிலிருக்கின்றனர். எதிர்கால சமுதாயம் பன்மொழிப் புலமையுள்ள சமூகமாக உருவாகுவதற்கு எல்லோரினதும் பங்களிப்பு அத்தியாவசியமானது. கடந்தகாலத் தலைவர்களான சேர். ராஷிக் பரீட், டாக்டர். டி. பி. ஜாயா போன்றவர்கள் எமக்குக் காட்டித்தந்த வழியில் சிங்கள மக்களுடன் நாம் அந்நியோன்னியமாகவே தொடர்ந்தும் வாழவிரும்புகின்றோம். நாட்டுப்பற்று முஸ்லிம்களுடன் ஊறிய ஒன்று. மார்க்கத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களினாலேயே நல்லாட்சியைக் கொண்டுவந்தோம். நாங்கள் தேர்தல் முறைமாற்றத்துக்காகவோ ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க வேண்டுமென்பதற்காகவோ நல்லாட்சியை நாம் எதிர்பார்த்து நிற்கவில்லை. எனினும் தேர்தல் முறை மாற்றம் நமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென்ற அச்சத்திலேயே நாம் இருக்கின்றோம். நாம் கொண்டுவந்த நல்லாட்சியால் எதிர்காலம் சூனியமாகிவிடுமோ என்ற அச்சம் எமக்கிருக்கின்றது. எமது வாக்குகளைப் பெற்றுவிட்டு எம்மைக் கறிவேப்பிலையாக கடந்த காலத்தில் பயன்படுத்தினர். தேசியக் கட்சிகளுக்க வாக்களித்து வாக்களித்து தேய்ந்து போன எமது மக்களுக்கு ஒரு சீரான பாதையைக்கூட கடந்த காலத்தில் அமைத்துத் தராத நிலையே இருந்தது.
குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கென நல்ல அரசியல் பன்புள்ள டாக்டர். ஷாபியை எமது கட்சியூடாக நாம் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டுமென்ற ஆசை அவருக்கு நிறைய இருக்கின்றது. அவருக்கு எமது அத்தனை ஒத்துழைப்புக்களையும் வழங்கி குருநாகல் மக்களுக்கு நாம் விமோசனம் பெற்றுக் கொடுப்போம். தடையையும், தடங்கல்களையும் தாண்டி மக்கள் பணிபுரிய உங்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம்.