Breaking
Wed. Dec 25th, 2024

அஸ்ரப் ஏ. சமத்

இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க தருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை முஸ்லிம் சமூகம் பாராட்டுகிறது என விடத்தல்தீவு இஸ்லாமிய விழிப்புணர்வு ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியுடனும் அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுடனும் மிகவும் நெருக்கமான, வலுவான உறவைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அதிகாரமிக்க அமைச்சு பதவியையும் வசதிகளையும் தூக்கியெறிந்துவிட்டு சமூகத்தின் நலனை மையமாக வைத்து அரசிலிருந்து வெளியேறியமை ஒரு துணிச்சல்மிக்க நடவடிக்கையாகும்.

அவரது இந்த தீர்க்கமான முடிவு முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் பெருமகிழ்ச்சியை அளிக்கின்றது.

அரசாங்கத்துடன் இருந்த வேளை பொதுபல சேனா, ராவண பலய, ஹெல உறுமய போன்றவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்ட றிஷாத் பதியுதீன், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு முஸ்லிம் மக்களின் விடிவை நோக்கமாகக் கொண்டு அரசுடன் தொடர்ந்தும் இருந்து வந்தார்.

மக்களின் மனநிலைகளையும் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு அரசிலிருந்து வெளியேறியிருப்பது பாராட்டத்தக்கது.

மதில்மேல் பூனைகளாக இருக்கும் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இவரது காலோசிமான முடிவு படிப்பினையாக இருக்க வேண்டும்.

மர்ஹூம் அஸ்ரப், முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி பல்வேறு காலகட்டங்களில் எவ்வாறு சாணக்கியமான முடிவுகளை மேற்கொண்டாரோ அதேபாணியில் வன்னி மைந்தன் றிஷாதும் மேற்கொண்ட முடிவு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த முடிவு ஜனாதிபதி தோதலில் பொது எதிரணிக்கு தெம்பையும் உட்சாகத்தையும் ஏற்படுத்தி, பொது எதிரணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய அரசாங்கத்தில் தலைவர் றிஷாத்தின் பணிகள் மேலோங்கி ஓட்டுமொத்த முஸ்லிம்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்த வேண்டுமென பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு விடத்தல்தீவு இஸ்லாமிய விழிப்புணர்வு ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post