Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விஷேட அறிக்கையாளரை இன்று காலை (20/ 10/ 2017) கொழும்பில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டு, முஸ்லிம் சமூக அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இன்று காலை நடந்த இந்த முக்கிய சந்திப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தது. அதனைப் பெற்றுக்கொண்ட  விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப், தனது அறிக்கையில் இந்த விடயங்களையும்  சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் ஆகியோரும், முஸ்லிம் காங்கிரசின் வெளிவிவகார பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் உடனிருந்தனர்..          

“முஸ்லிம்கள் தற்போது இந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, யுத்த காலத்தில் நடந்த இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படாமை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை இந்த சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற போதும், இன்னும் அவை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது” என்று தெரிவித்த அமைச்சர் ரிஷாட், அரசாங்கம் மேற்கொண்டு வரும் தேர்தல் முறை மாற்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உட்பட இன்னும் பல மறுசீரமைப்புக்களில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும், கோரிக்கைகளும் உள்வாங்கப்படாத நிலையே இருக்கின்றது என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

“எந்தவொரு அரசியல் மாற்றத்திலும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகமும் புறக்கணிக்கப்படாது கருத்திற்கெடுக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நாவும் இந்த விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும். சகல நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமூகமும் மூன்றாம் தரப்பாகப் பங்கேற்று, நாட்டின் முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களது பங்கினை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

எந்தவொரு காலத்திலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரிவினையையோ, பிளவினையோ விரும்பாது அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாகவும், ஒருமைப்பாடாகவும் வாழ்ந்து வருகின்றது. எனினும், அண்மைய காலங்களில் இனவாதப் பேச்சுக்களும், செயற்பாடுகளும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதுடன், அவர்கள்  கொச்சைப்படுத்தப்பட்டும், தூஷிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே, இந்த நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் நிறுத்துவதற்கு ஐ.நா காத்திரமான பணிகளை ஆற்றி, இன ஐக்கியம் வலுப்பெற உதவ வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். 

சுஐப் எம்.காசிம்

 

Related Post