Breaking
Sat. Nov 16th, 2024

04.11.2016 

நேற்று (03.11.2016) கொழும்பில் இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்காதே” என்ற போராட்ட  ஊர்வலம் முஸ்லிம் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையும் கோஷமும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களாலும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதனை ஏற்பாடு செய்தவர்கள் யாரென்பதை விடுத்து,  இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளாக அமைந்த “முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடாதே” என்ற விடயமே இங்கு நோக்கத் தக்கதாகும்.

எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில்,  விசேடமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் வயதெல்லை பற்றிய அல்லது வேறு சிக்கலான விடயங்கள் இருப்பின் முஸ்லிம் சமூகத்தில் உள்ள உலமாக்கள்,  ஷூரா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள்,  மார்க்க அறிஞர்கள்,  சட்ட நிபுணர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் இணைந்த ஒரு குழுவினால், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பரிசீலனைக்கு எடுத்து திருத்தங்களை முன் மொழியலாம் என்பதே எமது நிலைப்பாடாகும்.

GSP+ வரிச் சலுகை பெறுவதற்காக, முஸ்லிம் தனியார் சட்டம் சர்வதேச சட்டங்களின் தரத்திற்கு இணைவாக இருக்கவேண்டும் என்ற ஐரோப்பிய யூனியனின்  வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக,  அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும்,  அதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  ஊடக அமைச்சரும் அத்தோடு நீதியமைச்சரும் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளனர். இதற்கு, வேறு உள்நோக்கம் கொண்டவர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது..

ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றும்படி கேட்டிருப்பின் அதனை உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.

1806ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட “முஹமதிய சட்டம்” (Mohamedian Law) , 1951ம் ஆண்டு தகுதிவாய்ந்த முஸ்லிம் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பின்பு 1954ம் ஆண்டு அது பாராளுமன்ற சட்டமாக வெளிவந்தது. அன்றிலிருந்து இதுவரை, திருத்தம்கோறி கோஷம் எழுப்பப்படாத நிலையில்,  இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று போராடும் பெண்ணியவாதிகளும், அது போன்ற அமைப்புக்களும் யாரென்பதையும், அதில் முஸ்லிம் பெண்ணியவாதிகள் என்று கூறிக்கொண்டு அந்நிய மதப் பெண்களின் தாவணிக்குள் மறைந்திருக்கும் முஸ்லிம் பெண்ணியல்வாதிகள் யாரென்பதையும் முஸ்லிம் சமூகம் அறிய ஆவலாக இருக்கிறது.

கலாச்சார சீரழிவின் எச்சங்களான தஸ்லீமா நஸ்ரின் போன்ற பெண்களும், மதுக் கிண்ணங்களுடன் இரவு களியாட்டங்களில் உலாவரும் சல்மான் ருஷ்டி போன்ற உத்தமர்களும் இதன் பின்னனியில் உள்ளனரா என்கிற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில்,  நாட்டில் இன்று கொழுந்துவிட்டெறிந்துகொண்டிருக்கும் பாரிய பிரச்சனைகளான அரசியல் அதிகார பங்கீடு,  அரசியல் யாப்புத் திருத்தம்,  தேர்தல் முறை மாற்றம், தேர்தல் தொகுதி நிர்ணயம் போன்றவைகள் இருக்க, எதற்கும் இல்லாத அவசரத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைத்துத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்டியடிப்பது யாருடைய தேவைக்காக என்பதே முஸ்லிம் சமூகம் எழுப்பும் கேள்வியாகும்.

அதேநேரத்தில், இத்தகைய முஸ்லிம்களுக்கெதிரான முஸ்தீபுகளுக்கு , இஸ்ரேலிய  மொஸாட் போன்ற தீயசக்திகள் பின்னணியில் இருக்கின்றனவா என்கிற நியாயமான சந்தேகம் ஏற்படுகிறது.

இங்ஙனம்,

எஸ். சுபைர்தீன்

செயலாளர் நாயகம்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்⁠⁠⁠⁠

By

Related Post