Breaking
Mon. Dec 23rd, 2024

03.11.2016

இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று  டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது. அதன்பின், சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் மார்க்க மற்றும் அரசியல் அறிஞர்களை கொண்ட சபை மூலம் பரிந்துக்கப்பட்டு 1954  ஆம் ஆண்டு வலுவூட்டப்பட்ட சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

எனவே, “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது எமது முன்னோர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளில் ஒன்றாகும். இன்று, ஐரோப்பாவின் GSP+ வரிச்சலுகை பெறுவதற்காகவும் சர்வதேச நிலைபாட்டுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் “முஸ்லிம் தனியார் சட்டத்தில்” மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் மாத்திரமன்றி அது முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கைவைப்பதுமாகும்.

“முஸ்லிம் தனியார் சட்டத்தின்” கீழ்வரும் “விவாக/ விவாகரத்து சட்டத்தில்” வயதெல்லையிலும், வஃக்ப் சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு அங்கலாய்த்துக் கொள்பவர்கள் பெண்ணியவாதிகள் என்றும் மனித உரிமைவாதிகள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.

நடைமுறையிலுள்ள “முஸ்லிம் தனியார் சட்டத்தில்” குர்-ஆன், ஹதீஸ் ஆகியவற்றுக்கு முரண்பாடான விடயங்கள் இருந்தால் அவற்றை இறை சட்டங்களுக்கேற்ப நிவர்த்தி செய்வது முஸ்லிம்களின் கடமையே தவிர, NGO க்களின் கடமையல்ல.

எமது வீட்டில் திருத்த வேலைகள், பழுது பார்க்கும் வேலைகள் இருந்தால் அதை நாமே செய்ய வேண்டுமொழிய, அதில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை.

“முஸ்லிம் தனியார் சட்டம்” முஸ்லிம்களுக்கு மாத்திரமே அமுலாக்கப்படுகிறது. இந்த சட்டத்தால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத ஏனைய சமூகங்கள் மூக்கை நுழைப்பது மடத்தனமும் உள்நோக்கமும் கொண்டதுமாகும். இது “ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் வடிக்கும் கதைக்கு” ஒப்பானதாகும்.

எனவே, யாரெலாம் உண்மையாக “முஸ்லிம் தனியார் சட்டத்தை” பாதுகாக்க போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பது எமது மார்க்கம் சார்ந்த சமூகக் கடமையாகும்.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

By

Related Post