இவ்வாண்டின் முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளையும் இம் மாதம் 8ஆம் திகதி மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் விடு முறை வழங்க வேண்டும் என்ற முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடுத்த விஷேட வேண்டு
கோளின் பிரகாரம், முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை
விடுமுறையை 8ஆம் திகதி வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் இவ்வாண்டுக்கான பாடசாலை கால அட்டவணைக்கு அமைய, சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளும் முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறைக்காக ஏப்ரல் 8ஆம் திகதி கல்வி நடவடிக்கைளுடன் மூடப்பட்டு இரண்டாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைக்காக ஏப்ரல் 25ஆம் திகதி திறக்கப்படும் என்றும் முஸ்லிம் பாடசாலைகள் யாவும் ஏப்ரல் 11ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுடன் மூடப்பட்டு 18ஆம் திகதி 2ஆம் தவணைக்காகத் திறக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் முதலாம் தவணை விடுமுறையை வழங்கும் நோக்குடன் ஏப்ரல் 11ஆம் திகதி கல்வி நடவடிக்கையுடன் மூடப்படவிருந்த சகல முஸ்லிம் பாடசாலைகளும் ஏப்ரல் 8ஆம் திகதி கல்வி நடவடிக்கையுடன் 1ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாகவும் 11ஆம் திகதிக்கான பதில் பாடசாலை கல்வி நடவடிக்கை இம்மாதம் 30ஆம் திகதி நடத்தப்படுமெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்..