-விடிவெள்ளி ARA.Fareel-
கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயங்கள் பல ஒரு இனத்துக்கு சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம் கிராமங்கள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மை இன கிராமங்களுடன் இணைக்கப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை நாம் சீர்திருத்தி வருகிறோம் என எல்லை நிர்ணய முறைப்பாடுகளை ஆராயும் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
மொனராகலை, மெதகம கிராமத்தின் பள்ளிவாசலிலிருந்து எமக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிலும் அப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்கள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் கிராமங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. எல்லை நிர்ணய முறைப்பாடுகளை ஆராயும் குழு வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்துள்ளது.
இலங்கையில் மொத்தம் 4833 வட்டாரங்கள் இருக்கின்றன.
இந்த வட்டாரங்கள் அனைத்தினதும் எல்லை நிர்ணயங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த வட்டாரங்கள் அனைத்தினதும் எல்லை நிர்ணய முறைப்பாடுகளை ஆராய்ந்து மீள அமைப்பது என்பது இலகுவான காரியமல்ல.
எல்லை நிர்ணய நில அளவை வரைபடத்தை தயாரிப்பதற்கும் அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
எல்லைநிர்ணய முறைப்பாடுகளை விசாரித்து வெகு விரைவில் அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் நாம் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகளவான முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைத்தன. எல்லை நிர்ணய முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லை ஆரம்பத்தில் 2016 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதன்பின்பு காலஎல்லையை நீடிக்க வேண்டியேற்பட்டது.
மக்களிடமிருந்து முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்த வண்ணமிருந்ததால் மக்களுக்காகவே காலஎல்லையை நீடிக்க வேண்டியேற்பட்டது.
இன்னும் 8 மாவட்டங்களின் வட்டார எல்லை நிர்ணய முறைப்பாடுகளை விசாரித்து அது பற்றி ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிக்க வேண்டியுள்ளது. நாம் ஒரு கட்சிக்கு சார்பாகவோ ஒரு இனத்துக்குச் சார்பாகவோ எல்லைகளை நிர்ணயிக்கமாட்டோம். பௌதீக, பூகோள மற்றும் இன வேறுபாடுகளற்று நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார்.
அரநாயக்க பகுதி எல்லை நிர்ணயம்
அண்மையில் மண்சரிவு அபாயத்தினால் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். வேறு பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். இப்பகுதியின் எல்லை நிர்ணய முறைப்பாடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும் போது அப்பகுதி பூகோள அமைப்பு பௌதீக நிலை சனத்தொகை என்பன கருத்திற்கொள்ளப்படும்.
வில்பத்து சரணாலய பிரதேசம்
வில்பத்து பிரதேசத்தில் தற்போது குடியேற்றங்கள் உருவாகியுள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு அப்பகுதியில் மக்கள் குடியேறியுள்ளார்கள். இப்பகுதி எல்லை நிர்ணயங்கள் வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும்.
வில்பத்து பிரதேசத்திலும் சட்டரீதியற்ற குடியேற்றங்கள் இருந்தால் அவை எல்லை நிர்ணயத்தின் போது கவனத்திற்கொள்ளப்படமாட்டாது.
வடக்கு அதியுயர் பாதுகாப்பு பிரதேசம்
வடக்கில் அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தின் காணிகள் பல விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.
அப்பகுதிகளில் மக்கள் பூகோள அமைப்பின் வகையில் குடியேறியுள்ளதை உள்ளடக்கி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் என்றார்.