ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் கொலைச் சம்பவத்தில் இரு வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிவது அவதானிக்கப்பட்டு அதுவே சந்தேக நபர்களைக் கைது செய்ய முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.
இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தில் ஏறாவூர் நகரில் சுமார் 20 இற்கு மேற்பட்ட சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்கள் வீடுகளில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளதாக கேமரா பொருத்துநர்கள் தெரிவித்தனர். அதேவேளை, தொடர்ந்தும் வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதேவேளை கண்காணிப்புக் கேமராக்கள் திருடர்களுக்கும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்பதால் இந்த விடயத்தில் பொது மக்களை அக்கறை காட்டுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.