பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தில் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு பிரித்தானிய கலாசாரம் குறித்து அறிவுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே பாடம் கற்றுக்கொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
நியூபேர்ட் நகரிலிருந்து சிவம்பிரன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த மேற்படி பஸ்ஸில் பெண்ணொருவர் தனது மகனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பெண் முஸ்லிம் கலாசாரப்படி நிகாப்பும் அணிந்திருந்தார்.
இவர்கள் ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியில் உரையாடுவதை அவதானித்த ஆங்கிலேய நபர் ஒருவர், மேற்படி பெண்ணுக்கு அறிவுரை கூறி னார்.
“நீங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருக்கும்போது நீங்கள் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும்” என அந்நபர் கூறினார்.
அப்போது மேற்படி பெண் பதிலளிக்கும் முன்பாகவே அந்த பஸ்ஸிலிருந்த மற்றொரு வயோதிப்பெண், அந்நபரை திரும்பிப் பார்த்து, “அப்பெண் வேல்ஸில் இருக்கிறார். அவர் வேல்ஸ் மொழியில் உரையாடுகிறார்” எனக் கூறினார். அவ்வளவுதான் அந்த நபர் எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார்.
இவ்விடயத்தை மற்றொரு பயணி இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டனில் ஆங்கிலம் மாத்திரமல்லாமல் ஸ்கொட்லாந்தில் ஸ்கொட் டிஸ், வேல்ஸில் வேல்ஸ், வட அயர்லாந்தில் ஐரிஷ் போன்ற மொழிகளும் பேசப்படுகின்றன.
வேல்ஸில் ஆங்கிலமும் வேல்ஸும் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.