Breaking
Sun. Nov 17th, 2024

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை மற்றைய தலைமைகள் போல் நாங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து கொண்டு தீர்மானிக்கின்ற விடயங்கள் அல்ல. இந்த தலைமை உங்கள் பிரார்த்தனை மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று எமது கட்சி தலைவருக்கு பல சவால்கள் ஏற்பட்டிருக்கின்றது. நாங்கள் முஸ்லிம் மக்களை பற்றி, கல்வியை பற்றி, காணியை பற்றி, எங்கள் இருப்புக்கள் சரியாக இருக்க வேண்டும், பள்ளிவாயல்கள், உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசுகின்றோம்.

இதனால் பேசுகின்ற குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் அல்லது முஸ்லிம் கட்சி தலைவரை வைத்து நசுக்க வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கடந்த காலத்தில் கண்டோம்.

பாராளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மை தலைவர்கள் எங்களிடத்தில் கேட்கின்றார்கள். உங்கள் தலைவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் துவம்சம் செய்ய வரும் போது மற்றைய முஸ்லிம் கட்சி தலைவர்கள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கேட்கின்றனர்.

நாங்கள் மரணிக்கும் வரை உங்களுக்காக பேசுவோம் என்று சத்தியம் செய்து வாக்கு கேட்டவர்கள். அதனை செய்து தருவோம். இறைவன் எங்களுக்கு அதனை இலகுவாக்கி தருகின்றான் என்றார்.

Related Post