எஸ்.அஸ்ரப்கான்
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்முனையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உரையாற்றியதை தொகுத்து தருகின்றோம்.
மரணித்த ஒருவர் மஹ்சரில்தான் எழுப்பப்படுவார் என்பதுதான் எமது நம்பிக்கை. ஆனால் மரணித்தவர்கள் அடிக்கடி எழும்பி வருவதாக எமது நாட்டில் அவ்வப்போது மக்கள் கூறுவதுண்டு. அதுதான் தேர்தல் தினமாகும்.
தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் அவர்கள் சென்று விடுவதாக அடிக்கடிநாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நமது சாட்டின் வரலாற்றில் மரணித்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதாக என்றுமே கேள்விப்பட்டதில்லை. ஆனால் முதல் தடவையாக மரணித்த ஒருவர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றாரா ? என்கின்ற சந்தேகத்தை வெற்றிலை அணியினர் மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். அவர் வேறு யாருமல்ல, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாகும்.
ஏனெனில், விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் என்பவற்றை புகைப்படப் பிரதிகளோடு புத்தகங்களாக அச்சிட்டு வெளியிட்டிருப்பதோடு, தேசியத் தொலைக்காட்சிகளில் கடந்த சில தினங்களாக அக்கொடூர சம்பவங்களின் வீடியோ பிரதிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் செய்த அநியாயங்களுக்காக இன்னும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் இத்தேர்தலில் வெற்றிலை அணியில் வேட்பாளர் பிரபாகரனுடனா தேர்தலில் போட்டியிடுகின்றார் ?
மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டகாசங்கள், கொலைகள், பிரதானமாக கிழக்கு மாகாணத்திலேயே அரங்கேறின. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் தளபதியாக கருணாவும், பிரதித் தளபதியாக பிள்ளையானுமே இருந்தார்கள். மறுவார்த்தையில் கூறினால், இவ்வட்டூழியங்கள் இவர்களின் தலைமையிலேயே அரங்கேறின. இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனேயே இருக்கின்றார்கள். அவ்வாறாயின் இந்தக் கொடூரங்களை முஸ்லிம்களுக்கு இவ்வேளையில் நினைவுபடுத்துவது இவற்றுக்குக் காரணமானவர்கள் என்னுடன் இருப்பதால் எனக்கு வாக்களிக்க வேண்டாம். என்று முஸ்லிம்களை கோருவதற்காகத்தான் இருக்க வேண்டும்.
அல்லது இவ்வாறு கொடுமையைச் செய்த புலிகளை அழித்து சமாதானத்தை கொண்டவந்தவன் நான் எனவே, அதற்கு நன்றிக்கடனாக எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அதன் பொருளென்றால, இவற்றுக்குக் காரணமான தாய்ப்புலிகளை அழிக்காமல் பதவி, பட்டங்களைக் கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு நன்றிக்கடன் எதிர்பார்ப்பது எந்தவகையில் பொருத்தமானதாகும்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் கடந்த 2010 ஆம் ஆண்டு வட கிழக்கிற்கு வெளியே வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து வந்த முஸ்லிம்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் யுத்த வெற்றியின் நன்றிக்கடனாக வாக்களித்தார்கள். அதற்குச் செய்த கைமாறா, வட கிழக்கிற்கு வெளியே மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்னுமொரு பிரபாகரனாக மாறியது.
அதற்கு நன்றிக்கடனாகவா வட கிழக்கிற்கு வெளியே கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்கள் இன்னுமொரு பிரபாகரனை சந்திக்க நேரிட்டது. அந்த பிரபாகரனின் செயல்கள் தேசிய தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் வெளியிட முடியுமாக இரந்தால் கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகளை ஏன் வெளியிட முடியவில்லை.
தேசிய தொலைக்காட்சிகளிலும், குறித்த விளம்பரப் புத்தகங்களிலும் தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்ட படங்கள் ஏன் வெளிவரவில்லை ? கிறேன்பாஸ் பள்ளிவாயலுக்கு கல்லெறிந்த படங்கள் ஏன் வெளிவரவில்லை ? அளுத்கமயில் பள்ளவாசல்கள், தொழில் நிறுவனங்கள் எரிக்கப்பட்ட படங்கள் ஏன் வெளிவரவில்லை?ஏன் வெளிவர வில்லை ? இந்த அநியாயத்திற்கு எதிராக முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்பது ? சொல்லாமலே புரியாதா ? மைத்திரிக்குத்தான வாக்களிப்பதென்பது ? அதனைத்தான் முஸ்லிம்கள் செய்ய இருக்கின்றார்கள்.