“”நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!”என்கிறார். சாகப்போகும் வேளையில் புண்ணியம் தேடிப்பயனில்லை.
திருமணத்தின் அவசியம்
திருமணத்தின் அவசியம் பற்றி சற்று வெளிப்படையாகவே பேசுகிறார் நபிகள் நாயகம்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். திருமணம் செய்து மனைவியைக் காப்பாற்றும் வசதியில்லாதவர்கள் தங்கள் உடல் வேட்கைக்காக விலைமாதர்களை நாடுகிறார்கள். இது பெரும் ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கிறது. நோய்களை உண்டாக்குகிறது. திருமணம் செய்ய வசதியிருந்தும், ஜாலியாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில், சிலர் கெட்டு அலைகிறார்கள். அதனால் நாயகம் சொன்னார். “”இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. பார்வை அங்கும் இங்கும் அலைபாய்வதை விட்டும், காம இச்சை யினால் சுதந்திரமாக திரிவதை விட்டும் பாதுகாக்கிறது. திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்,” என்று. திருமணம் செய்ய வசதியில்லாதவர்கள், தங்கள் உடல் இச்சையை அடக்க நோன்பு முதலானவற்றில் இறங்கி, மனதைக் கட்டுப்படுத்த வேண் டுமே தவிர, தவறான வழியில் இறங்கி விடக்கூடாது என்று சொல்கிறது இஸ்லாம்.
நல்ல குணம் நன்மை தரும்
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது, அவர்கள் சரியான பெற்றோராக இருந்தால், “”மாப்பிள்ளை நல்ல அழகா?” என்று கேட்பதை விட “”மாப்பிள்ளை நல்ல குணமா? கடைசி வரை என் பெண்ணை வைத்து குடும்பம் கழிப்பாரா?” என்று தான் கேட்பார்கள். நற்குணமுள்ளவர்களையே நபிகள் நாயகம் விரும்பினார். “”எவரையும் துன்புறுத்தாமல் இருப்பதே நற்குணமாகும்” என்று இஸ்லாம் சொல்கிறது. நாயகம் நற்குணம் உள்ளவராக வாழ்ந்து காட்டினார். அவரது தோழர் ஒருவர் அவரைப் பற்றிக் கூறும் போது, “”அண்ணல் நபிகள்நாயகம் வெட்கமற்ற பேச்சை தம் நாவால் பேசுவதுமில்லை. வெட்கமற்ற செயலைச் செய்வதுமில்லை. மேலும் “உங்களில் நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்’ என்று கூறுவார்,” என்றார். நல்ல குணம் நன்மையைத் தரும்.
குறையை திருத்திக் கொள்ளுங்கள்
குர்ஆனில், “”உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்கு கண்ணாடி போன்றவர்கள் ஆவர். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால், அதனைக் களைந்து விட முயற்சி செய்ய வேண்டும்,” என்ற வசனம் இருக்கிறது. அதாவது, மனிதன் இன்னொரு மனிதனை தன் சொந்தச் சகோதரனாகவே கருத வேண்டும். தம்பி முன்னேற அண்ணனும், அண்ணனின் குறைபாட்டை தம்பியும் எடுத்துச் சொல்லி திருத்தலாம். இவர்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதால் சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால், நண்பர்கள் விஷயத்திலும், பிற உறவினர்கள் விஷயத்திலும் கொஞ்சம் கவனம் வேண்டும். சிலர் தன்னுடைய சொந்த விஷயங்களில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை. எனவே, அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். நாம் சொல்வதை ஒருவர் கேட்கமாட்டார் எனத்தெரிந்தால், அப்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு சந்தர்ப்பம் பார்த்து பேச வேண்டும். ஒருவரின் குறையை மற்றொருவரிடம் சொல்லி அவர் மூலமாக திருத்த முயற்சிப்பது தவறான முயற்சி. ஏனெனில், இது புறங்கூறுவது போல் ஆகி, பகையை உண்டாக்கி விடும். எனவே, ஒருவர் நமது குறையைச் சுட்டிக்காட்டினால், அதில் உண்மையிருக்கும் பட்சத்தில் அந்த விமர்சனத்தை ஏற்று, திருத்திக் கொள்ள வேண்டும்.