ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ஆரம்பகால போராளிகள் சிலர், அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மாவடிப்பள்ளிக்கு வருகை தந்த அவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்று, மாவடிப்பள்ளி மத்திய குழு மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜலீல் ஆகியோரின் ஏற்பாட்டில் ( 23 ) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த காலத்திலிருந்தே அக்கட்சியோடு பயணித்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த ஆரம்பகாலப் போராளிகளும், மு.கா வின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள் சிலரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,
கடந்த இருபது வருடகாலமாக, போலி வாக்குறுதிகளை வழங்கி எம்மையும், எமது ஊரையும் ஏமாற்றி, எமது வாக்குகளை சூறையாடிய கட்சியினதும் கட்சித் தலைமையினதும் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்ததன் காரணமாகவே, தாம் மு.கா வை விட்டு வெளியேறியதாகவும், இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்துக்காக தைரியமாகக் குரல்கொடுத்து போராடியதன் விளைவாக, பேரினவாதிகளினாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகொண்டோரினாலும் பல்வேறு இன்னல்களுக்காளாகி, பழிவாங்கப்பட்டு, நிம்மதியை இழந்து, நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையிலும், எமது சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் மக்கள் காங்கிரஸ் தலைமையையும், கட்சியையும் பலப்படுத்துவதற்காகவே கட்சியில் இணைந்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் வேட்பாளர்களான முஷாரப், மாஹிர், ஜவாத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் போராளிகளும் கலந்துசிறப்பித்தனர்.