ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியுமா என்பதற்கான முடிவினை உயர் நீதிமன்றமே வழங்க வேண்டும். எனவே நாட்டில் சுயாதீன நீதிமன்றம் காணப்படுமாயின் நல்லதொரு தீர்ப்பு கிட்டும் என ஐ.தே.கட்சி தலைமைத்துவ சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருஜெயசூரிய தெரிவித்தார்.
அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எமது கொள்கைக்கு உடன்பட்டால் ஐ.தே.க. வுடன் இணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்;
அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய சரத் என். சில்வாவின் கூற்று தொடர்பாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சட்ட வல்லுனர்களிடம் வினவிய போது நீதியரசரின் கூற்று யதார்த்தமானது என்று கூறினர்.
எனினும், இதற்கான தீர்வினை உயர் நீதிமன்றமே வழங்க வேண்டும். எனவே, நாட்டில் சுயாதீன நீதிமன்றம் காணப்படுமாயின் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.
அத்தோடு இது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. ஏனெனில், 18 ஆவது திருத்தத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டும் அதனை நிறைவேற்றியது பாராளுமன்றமேயாகும்.
இதேவேளை, ஐ.தே.க. தற்போது வலுவடைந்துள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சியையும் இணைத்துக்கொள்ள ஐ.தே.க. தயார். எனினும், எமது கட்சியின் கொள்கைகளுக்கு குறித்த கட்சியே உடன்பட வேண்டும் என்றார்.