Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு-

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கு றவூப் ஹக்கீம் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக காணப்படுகின்றார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அண்மையில் ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வர்த்தக நிறுவனமாக காணப்படுவதுடன் அதன் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளராகவும் அவருக்கு கீழே வியாபார பிரதி நிதிகள் என்று சொல்லக்கூடிய கொஞ்சப் பேர் இருப்பார்கள். ஒவ்வொரு தேர்தல் காலம் வந்தாலும் அந்த தேர்தல் சந்தையிலே என்ன வியூகத்தை நாங்கள் எடுத்தால் ஆகக்கூடிய ஆதாயம் எங்களுக்கு கிடைக்கும் என்று மட்டும் வைத்து அவர் முடிவெடுப்பார். அந்த முடிவுகள் எடுக்கப்படுகின்ற பொழுது நான் ஒவ்வொரு முறையும் உள்ளே இருந்து அவருடன் சண்டை பிடித்துள்ளேன்.

2003 ஆம் ஆண்டில் இருந்து அவருடன் நான் முறுக்கிக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் அவருக்கு நான் இடைஞ்சலாக இருந்தேன். அவர் பார்த்தார் இவரை நாங்கள் கட்சியில் வைத்திருந்தால் நமது வியாபாரம் பிழைத்துப் போகும். ஆகவே, எப்படியாவது இவரை வெளியேற்ற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தார். அதனால் எனக்கு அப்படியான கட்டம் ஒன்று வரும் என்று எனக்கு தெரியும். நானும் அந்த கட்டத்தை எதிர்நோக்குவதற்கு தயாராக இருந்தேன். அந்த கட்டம்தான் 2015 ஆம் ஆண்டு கடைசியாக நடந்த உயர்பீட கூட்டத்திலே அந்த கட்டத்தை நான் சந்தித்தேன்.

கட்சியின் யாப்பிலே ஒரு மாற்றத்தை அவர் கொண்டுவந்தார். அதாவது, கட்சியின் அதிகாரம் பொருந்திய ஒரு செயலாளர் இருக்கும் பொழுது, இன்னும் ஒரு செயலாளரை நியமித்து அந்த புதிய செயலாளர் மாத்திரம்தான் தேர்தல் ஆணையகத்துடனும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனும் தொடர்பு கொள்ளக்கூடிய அதிகாரம் உள்ளவெரென்றும், அப்படியான செயலாளர் எந்தவொரு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் மாத சம்பளம் பெருகின்ற தேவையையும் அதனுல் உள்ளடக்கி புதிய செயலாளரை அவர் உருவாக்கினார்.

புதிய செயலாளரை உருவாக்கிவிட்டு என்னை வெரும் செயலாளர் நாயகம் என்ற பதவியில் செல்லாக்காசாக உருவாக்கிய பொழுது அவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. அந்த இடத்திலே சுமார் இருபத்தைந்து பேர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் எல்லோரும் ஹக்கீம் என்ற தனிமனித நிறுவனத்தில் மாத சம்பளம் எடுக்கின்ற கேவலமான ஒரு நிலமையிலேயே அந்த சம்பளத்திற்காக அடிபணிந்தவர்களாக இருந்தார்கள். இவ்வாறு தன்னைச் சுற்றி தன்னைப் பலப்படுத்துவதற்காக கட்சியின் யாப்பை தனக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு உயர்பீட கூட்டத்தின் போதும் மாற்றிக் கொண்டு வந்தார்.

அதன் கடைசி கட்டத்தில்தான் 2016 ஆம் ஆண்டு புதிய செயலாளர் ஒருவரை உருவாக்கிவிட்டு, எனக்கு வேறொரு பதவிக்கு நீங்கள் போங்கள் என்று சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். இந்த ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட அறியாத ஒருவர். இந்த கிழக்கு மாகாணத்தில் அன்று பெருந்தலைவர் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியை,  தனது சொந்தக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக செயலாளர் அவர்களை உருவாக்கினார்.

அப்போது நான் தலைவரிடம் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்று, நீங்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியிலே தலைமைத்துவம் இருக்கின்ற பொழுது, அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவி கிழக்கிலே இருக்க வேண்டும் என்ற ஒரு சம்பிர்தாயம் இந்த கட்சியிலே இருக்கின்றது, நீங்கள் அதிகாரம் பொருந்திய செயலாளராக இருக்கின்ற பொழுது அஷ்ரப் அவர்கள் தலைவராக இருந்தார். இப்பொழுது நீங்கள் செய்கின்றதைப் பார்த்தால் அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை முடக்கி, அவர் பாராளுமன்றத்திற்கு மாத்திரம் அல்ல ஒரு உள்ளுராட்சி சபையிலும் கூட ஒரு உறுப்பினராக போட்டியிட முடியாது என்ற நிபந்தனை விதித்திருக்கீன்றீர்கள். இதன் மூலம் எங்களுடைய மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை பறித்தெடுத்திருக்கின்றீர்கள். அதற்கு ஒரு உதாரணமாக சொன்னேன், நாங்கள் பெருந்தேசிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கின்ற பொழுது அதிகமான ஆசனங்களைப் பெற்றால் எமது கட்சிக்கு அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி இரண்டினைப் பெற்று, ஒன்று உங்களுக்கும் மற்றையதை கிழக்கிற்கும் வழங்கலாம்தானே. என்னை மனதில் வைத்துக் கொண்டு இந்த அநியாயத்தை செய்கின்றீர்கள். எனக்கு இந்த பதவி வேண்டாம் நான் விலகிக் கொள்கிறேன். ஆனால், இந்த சபையிலே இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த யாருக்காவது இந்த பதவியைக் கொடுங்கள் என்று சொன்னேன்.

உடனே தலைவர் ஹக்கீம் துள்ளிக் குதித்து இந்த கட்சியிலே இரண்டு அதிகார மையங்களை உருவாக்க பார்க்கின்றீர்கள். ஒரு உரைக்குள் ஒரு வாள்தான் இருக்கலாம். இரண்டு வாள்கள் இருப்பதற்கு நான் தலைவராக இருக்கும் வரை அதற்கு அனுமதிக்க மாட்டேன். இந்த கட்சியில் நான் மட்டும்தான் அதிகாரம் உள்ள அமைச்சராக இருக்கலாம். வேறு யாரும் வரமுடியாது என்று ஒரு குண்டை அவர் தூக்கிப்போட்டார். அப்போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் ஸலாம் சொல்லிவிட்டு முப்பத்திரெண்டு வருடமாக அக்கட்சியில் இருந்து அரசியல் செய்த நான் வெளியேறினேன் என்று தெரிவித்தார்.

Related Post