–ஏ.எச்.எம்.பூமுதீன்–
கல்முனையை அஷ்ரப் காலம் தொட்டு கோலோச்சி வந்தவர்களில் ஜவாத்துக்கும் முக்கிய பங்குண்டு. கல்முனையில் இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் எனும் நாமம் ஒலிப்பதற்கும் ஜவாத்தின் வகிபாகம் இல்லை என்று எவருமே கூறவும் மாட்டார்கள்.
அப்படிப்பட்ட முன்னாள் பிரதி மேயர், மாகாண சபை உறுப்பினர் கே.ஏ.ஜவாத் நேற்று முதல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை உணர்வோடு தொடர்பான “தலைமை” மாறலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
“டயஸ்போராவுக்கு துணை போகும் ஹக்கீம்” என்ற ஜவாத்தின் கூற்று, அவர் கட்சிக்காக மாறவில்லை, மாறாக ரிஷாத் பதியுதீன் எனும் “ஆளுமைமிக்க தலைமை” க்காகவே மாறியுள்ளார் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
மு.கா வுக்குள்ளிருந்து நீண்டகாலமாக போராடி, அஷ்ரபின் கட்சியை நேரான வழியில் கொண்டுசெல்ல அவர் எடுத்த அத்தனை முயற்சிக்கும் பலன் போதுமானளவில் கிட்டாத போதுதான் தலைமையை மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார், என்பதை மு.கா போராளிகளின் ஒவ்வொரு மனசாட்சியும் சான்று கூறும்.
டயஸ்போராவுக்கு துணை போகும் ஹக்கீம் என்ற சொற்பிரயோகம் மிக இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய வார்த்தை பிரயோகம் அல்ல.
வடக்கு – கிழக்கு இணைப்பு ஆதரவு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடை, தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு என்பதையும் தாண்டி, மு.காவும், தமிழ் கூட்டமைப்பும் வடக்கில் இணைந்து போட்டியிடும் முடிவு, என்ற வடக்கு முஸ்லீம் சமூகத்தை கருவறுக்கும் முயற்சி வரைக்கும், மு.கா தலைவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில், ஜவாத் கூறும் டயஸ்போராவே உள்ளது என்பது மேலும் நிரூப்பிக்கப்படுகின்றது.
ஜவாத்- உணர்வு ரீதியான அரசியல்வாதி. அதனால்தான் ரிஷாத் பதியுதீனுடன் அவர் இணைவதற்கு காரணமாக இருந்துள்ளது. சமூகம் தொடர்பில் அவர் கொண்ட அக்கறையின் வெளிப்பாடுதான் ” டயஸ்போராவுக்கு துணைபோகும் ஹக்கீம்” என்ற சொற்பிரயோகம்.
முகாவை விட்டு பலர் வெளியேறிய போதிலும், ஜவாத் கூறிய இந்த டயஸ்போரா காரணத்தை அவர்கள் எவருமே கூறியிருக்கவில்லை. அதனால்தான் உணர்வு ரீதியான அரசியல்வாதி ஜவாத் என்று ஆரம்பத்திலேயே கூறிவைத்தேன்.