-ஊடகப்பிரிவு-
முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மீண்டுமொரு முறை, தேர்தல் களத்தில் நேரடியாக களமிறங்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நமது தலைவர் மாமனிதர் அஷ்ரப், நமது தேசியத்தின் அரசியல் இயக்கமாக நமக்கு அறிமுகப்படுத்திய நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து, இத்தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது கவலையான விடயம்தான்.
ஆனாலும், நமது துப்பாக்கியினை நமது காவலுக்காக காவல்காரன் ஒருவனிடம் கொடுத்த நிலையில், அந்த காவல்காரன் எதிரியிடம் சோரம்போய் அல்லது அகப்பட்டு விட்டான். மேலும், நமது காவலுக்காக நியமிக்கப்பட்டவன், நமது துப்பாக்கியினாலேயே நம்மை அழிக்க வருகிறான். இந்த சமயத்தில் நமது துப்பாக்கி அல்லவா, அதற்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று, துப்பாக்கியை பாதுகாத்து நாம் அழிந்து போவதா? அல்லது துரோகமிழைத்த காவல்காரரை அழித்து, நமது துப்பாக்கியை நாம் மீட்பதா? என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வியாகும்.
இவ்வாறான நிலையொன்றில்தான், தற்போதைய எனது அரசியல் முடிவும் அமைந்துள்ளது.
நமது சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட நமது கட்சியின் தலைமை, நமது எதிரிகளிடம் அகப்பட்டுக்கொண்டு அல்லது சோரம்போய் கிடக்கிறது. இந்த நிலையில், கட்சியின் மீது நமக்கிருக்கின்ற அபிமானத்தை ஆயுதமாக்கி, நமது எதிர்காலத்தை நமது எதிரிகளிடம் நமது கட்சித் தலைமை அடகுவைக்க வந்தபோது வாய்மூடி மௌனியாக இருக்க என்னால் முடியவில்லை.இவற்றினை நீங்கள் அறியாதிருக்கலாம்.