Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம்.காசிம் –

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வீடுகளை விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று (24/06/2016) தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் இன்று (24/06/2016) பங்கேற்றார். இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக சாய்ந்தமருது மீனவக் குடியிருப்புக்கு விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்து தொழிலில் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அறிந்துகொண்டார். சுனாமியின் கோரவிளைவால் சாய்ந்தமருது கடற்கரையோரத்தில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் இடிபாடுகள் இற்றைவரை அகற்றப்படாமையினால், மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பெருங்கஷ்டங்களை எதிர்கொள்வதாக அங்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு உடனடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வகையில் அமைச்சர் றிசாத், ரூபா பத்து இலட்சத்தை மீனவச்சங்கப் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.

நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட இழுபறி குறித்து ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கலந்துரையாடி, உறுதியானதும், நம்பிக்கையானதுமான முடிவொன்றைப் பெற்றிருக்கின்றோம். தேர்தல் காலத்திலும் இதனை நாம் சுட்டிக்காட்டினோம். கொழும்பு திரும்பியதும் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றைக் கையளிக்கத் தீர்மானித்துள்ளோம்.

கரையோர மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் கடந்த தேர்தலில் எமக்கு எட்டாக்கனியாகிய போதும், கட்சிக்கு ஆதரவளித்தவர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

இந்த மாவட்டத்தின் கைத்தொழில், மீன்பிடி, விவசாயம் ஆகிய நடவடிக்கைகளுக்குக் கைகொடுப்போம். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் ஒருபோதும் காற்றில் பறக்காது.

சம்மாந்துறையில் 3000 பேருக்கு தொழில் வழங்கும் வகையிலான கைத்தொழில் பேட்டை ஒன்றுக்கு இடம் அடையாளங் கண்டபோது, அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இங்குள்ளோர், அதற்குத்  தடை போடுகிறார்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் நாம் எடுத்த காரியத்தை முடித்தே தீருவோம். இறைவனின் உதவியால் இந்த வருட இறுதிக்குள் இது சாத்தியமாகும்.

கிழக்கில் பொத்துவில் தொடக்கம் புல்மோட்ட வரையிலான கடற்பிரேசத்தை அண்டி வாழும் மீனவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை கண்ணாரக் கண்டிருக்கின்றோம். மீனவ சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு திட்டமிட்ட முறையில் வேலைத்திட்டம் தொடங்கப்படும். நானும், பிரதி அமைச்சர் அமீர் அலியும் இது தொடர்பில் மீன்பிடி அமைச்சருடன் காத்திரமான பேச்சு நடத்தியுள்ளோம்.

நெல் உற்பத்தியாளர்களின் கஷ்டங்களைக் கடந்த வருடம் தீர்த்துவைத்தது போல இம்முறையும் உதவியளிப்போம். கரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். சீனித் தொழிற்சாலை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்க்கப்பட்டதாலேயே இந்தக் கஷ்டம். ஜனாதிபதி, பிரதமரிடம் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டிய போது,  இதனை ஆராய்ந்து நல்ல முடிவைக்காண அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளனர். நல்லவை நடக்குமென நம்புகின்றோம் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

13466348_608520925980623_575127783868214818_n 13501928_608519952647387_3433516173446432819_n 13494783_608519965980719_1898607582692400612_n

By

Related Post