யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாந்தை சோல்ட் லிமிடட்டின் புதிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், அந்த நிறுவனத்தின் அரச சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், நேற்று ஞாயிற்றுகிழமை (27.08.2017) அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போதே, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கில் மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலைகளான பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை காகித தொழிற்சாலை ஆகியவற்றை மீளக்கட்டியெழுப்ப, அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு வெளிநாடுகளின் உதவி பெறப்படும். அது மாத்திரமன்றி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் முதலீடு செய்யமுடியும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு இதன் மூலம் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கமுடியும்.
மாந்தை உப்புக் கூட்டுதாபனத்தை என்னிடம் கையளித்தபோது, நான் அதனை ஆர்வத்துடன் கையேற்றேன். மன்னார் மாவட்டத்தின் வளங்களில் பிரதானமானது உப்பு. அதனை வளப்படுத்த விழைந்தேன். அப்போது கூட்டுத்தாபனம் அமைந்திருந்த காணிகூட உரிமை முடிந்தும் எல்லைகள் சீரற்றும் கிடந்தன. அவற்றைச் சீர்படுத்த பிரதேச செயலாளர் உதவினார். உப்புக் கூட்டுத்தாபனத்தை வளப்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்க நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற அமீன் அவர்களினதும், பணிப்பாளர் சபையினதும் ஒத்துழைப்புடன் மூடப்பட்டுக் கிடந்த ஆனையிறவு உப்பளத்தை பொறுப்பேற்று துரித வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாகவும் தரமான உப்பை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் மாற்றி அமைக்கும் பணியில் வெற்றி கண்டு வருகின்றோம்.
எதிர்காலத்திலே மேசை உப்பு (Table salt) உற்பத்தியை உற்பத்தி செய்து வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் உண்டு. அதுமட்டுமன்றி, தொழிலாளர்களின் நலன்களை பேணவும் அவர்களின் எதிர்காலம் சிறப்படையவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் உப்பைப் பற்றி அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் மீனவர் சமூகம் அதிகமாக இருப்பதனாலும், மீனுக்கும், உப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதனாலும் அந்தச் சமூகத்தின் சார்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஏனையவர்களுக்கு வழங்கப்படும் விலையைவிட சற்று குறைவாக மீனவர்களுக்கு உப்பை வழங்குமாறு அவர்கள் விடுத்துவரும் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்குமாறு நிர்வாகத்திடம் நாம் கோரிக்கைவிடுகின்றோம். அந்த சமூகத்துடன் நெருங்கிய தொடர்பாடலை பேணுமாறும் அவர்களின் வாழ்ககையை மேம்படுத்துமாறும் வேண்டுகிறேன்.
மன்னார் மாவட்டத்தில் உப்பு மற்றும் ஓரிரு தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிலகங்கள் குறைவு. எனவே, மாந்தை, மடு பிரதேசங்களை மையமாக வைத்து தொழில்பேட்டை ஒன்றையும் மன்னாரில் மற்றுமொரு தொழில்பேட்டை ஒன்றையும் சிலாவத்துறை முசலி பிரதேசத்தில் மேலுமொரு தொழில்பேட்டை ஒன்றையும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். ஏற்கனவே, ஐந்து வருடத்திற்கு முன்னர் மன்னார் சாவக்காட்டுப் பிரதேசத்திற்கு அருகில் அரச காணியொன்றை பெற்று கைத்தொழில் பேட்டை ஒன்றை நிறுவினோம். அரச காணிகளை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்ததினால் அவர்களின் எதிர்ப்புக்களையும் எமக்கு சம்பாதிக்க நேர்ந்தது. பல சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த கைத்தொழில் பேட்டையில் தற்போது ஆயிரம் பேர்மட்டில் தொழில் புரிகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி, டி.மேல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம். முனவ்வர், வடமாகாண மஜ்லிஸுஸ் ஸுரா தலைவர் மெலாவி முபாறக், பொது முகாமையாளர் துவான் மன்சில், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களான ஹஜ்ஜீக் சனூஸ், மீள்குடியேற்ற அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு