நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூடி மறைக்கப்பட்டுள்ள ‘பைல்கள்’ மீள திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சட்டத்தரணிகள் சங்க நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி நல்லாட்சிக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீண்ட தூர பயணத்தில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும்தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இடம்பெறும் மிக முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஜனாதிபதியொருவர் சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பணிமனைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கான வாய்ப்பைத் தந்த சங்கத்தினருக்கும் எனது நன்றிகள்,
நாட்டில் சட்டத்தின் ஆதிபத்தியத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர் என்ற வகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளதில் நாம் பெருமையடைகிறோம். எமது நாட்டின் சட்டத்துறை சார்ந்த அனைவரும் அரசாங்கமும் பெருமைப்படும் விடயம் இது.
மற்றொரு விதத்தில் இந்த விருது பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதால் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் என்ற வகையிலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நாட்டின் சட்டத்துறையில் பிரபலமான உபுல் ஜயசூரிய போன்றவர்கள் இத்தகைய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டமையும் பெருமைக்குரியது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்படுகையில் சட்டத்தின் ஆதிபத்தியத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும். அந்த சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சட்டத்தின் ஆதிபத்தியத்தைப் பாதுகாக்கின்ற அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.
இப்போது ஜனாதிபதி மாளிகையிலி ருந்தோ ஜனாதிபதி செயலகத்திருந்தோ ஜனவரி 8ம் திகதிக்குப் பின் புதுக்கடைக்கு தொலைபேசி மூலமாக அழுத்தங்கள் வருவதில்லை. இப்போது முழுமையான சுதந்திரம் உள்ளது. சட்டத்துறை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உட்பட்டுள்ள அனைவருக்கும் சுதந்திரமாக செயற்பட முடிகிறது.
கடந்த ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி இடம்பெறுவதாக பலரும் தெரிவிக்கின்றனர். நான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். நாட்டில் நல்லாட்சிக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்குப் பயணிக்கும் பிரவேசம் உருவாகியுள்ளது. ஒரு ஆரம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தார்மீகம், சட்ட ஆட்சி, சுதந்திரம், ஜனநாயகம், அடிப்படை உரிமை இவை அனைத்தும் சீரழிக்கப்பட்டிருந்த நாட்டில் அவற்றை மீளக் கட்டியெழு ப்புவது என்பது 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளக்கூடியதல்ல.
அதேபோன்று இங்கு பலரும் அரசியல் கலாசாரம் பற்றி கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். தவறான அரசியல் கலாசாரத்தை சரி செய்வதற்கும் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும், சிறந்த அரசியல் கலாசாரம் சிதைந்து விடாத வகையில் கட்டியெழுப்புவதும் அவசரமாகச் செய்யக்கூடிய காரியமொன்றல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
இவையனைத்திலும் நாம் நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது. அந்த பயணத்திற்கான ஆரம்பதையே நாம் ஏற்படுத்தியுள்ளோம். இதற்கு அனைத்துத் தரப்பினரதும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இதில் எமக்குள்ள விரிவான பொறுப்பையும் கடமையையும் நாம் உணர்ந்துள்ளோம். சுதந்திரமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் சகல துறைகளிலும் எமது பொறுப்பையும் கடமையையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
உபுல் ஜயசூரிய தமக்குக் கிடைத்த இந்த பெருமைக்குரிய விருதையும் நன்கொடைப் பணத்தையும் ஒருவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளமை பாராட்டுக்குரியது.
குறிப்பாக கடந்த சில வருடங்களாக எமது நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் மனித உரிமை போன்ற விடயங்கள் ஐ. நா. உட்பட பல்வேறு அமைப்புக்களிலும் பேசப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர் எக்னெலிகொடயை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இந்த நன்கொடை வழங்குவது மிக பொருத்தமானதாகும்.
கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களை நோக்கும்போது ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் மற்றும் பலியாகியுள்ளமை, சுதந்திரமான ஊடகத்துறை எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் என்பதை நாம் அறிந்ததே.
இந்த நன்கொடைக்கு எக்னெலிகொட தேர்ந்தெடுக்கப்பட்டமை போன்றே, கடந்த காலங்களில் காணாமற்போன, ஊடகவியலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் உரிய கோவைகளை மீள திறப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மறைக்கப்பட்டுள்ள பல விசாரணைகள் மீண்டும் மேலெழுப்பப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விதத்தில் விசாரணைகளை முன் னெடுக்க வழிவகை செய்யப்பட் டுள்ளது.
அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளோம். அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.