மூதுார் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பை போன்றது,இதற்கு அல்லாஹ்விடத்தில் பதில் கூற நேரிடும் என்று அ.இ.மா.கட்சியின் தேசிய தலைவர் றிசாத் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தமது உயிரையும்,உதிரத்தையும் தியாகம் செய்த மூதுார் மக்களுக்கு அந்த கட்சி எதையும் செய்யவில்லை,இம்மக்கள் அபிவிருத்தியின்றி அல்லலுறுகின்றனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த தேர்தலிலும் நீங்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் அதன் மூலம் இன்னும் 5 வருடங்கள் இந்த மக்கள் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்,இதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மூதுர் அரசியல் விழிப்புணர்வு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
திருகோணமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –
எமது நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கான காரணம்,முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கின்ற பள்ளிவாசல்கள் மேீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் என்பதை இன்று சிலர் மறந்து பேசுகின்றனர்.இந்த பதவிகள் என்பது அமானிதம்,அதனை நாம் சரிவரச் செய்யவிட்டால் அல்லாஹ்விடத்தில் பதில் கூறியே ஆக வேண்டும்.எமது கட்சியாக இருந்தால் என்ன முஸ்லிம் காங்கிரஸாக இருந்தால் என்ன எல்லா கட்சிகளும்,அல்லாஹ்வின் திருப்தியினை நாடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமைத்துவம் அவ்வாறு சிந்திப்பதில்லை.
நாடு முழுக்க ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச்சின்னத்தில் போட்டியிடும் தீர்மாணத்தை நாம் எடுத்திருந்தோம்.ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் யாணையிலும்,வன்னி,மற்றும் மடட்டக்களப்பு மாவட்டங்களில் மரச் சின்னத்திலும் போட்டியிடுவதாக கூறினார்.
நாம் அவரிடம் சொன்னோம் வன்னியில் தனித்துக் கேட்டு வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டும் எதற்காக வேட்பாளர்களை நிறுத்துகின்றீர்கள் என்று அதற்கு அவர் சொன்னது எனக்கு தெரியும் நாம் வெற்றி பெறமாட்டோம் என்று ஆனால் வன்னியில் றிசாதை தோற்கடிப்பதற்கும்,மட்டக்களப்பில் அமீர் அலியினை தோற்கடிப்பதற்காகவும் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
ஆனால் நாம் அரசியலுக்கு வந்தது,வடக்கில் புலிகளால் விரட்டப்பட்ட 1 இலட்சம் முஸ்லிம்களின் துயர் துடைக்க,அதனை செய்வதற்கு அரசியல் பலம் என்பது மிகவும் முக்கியமானதாகும்,அதற்காக மக்கள் பிரதி நிதிகளை அதிகரித்துக் கொள்கின்ற போது அதனை இல்லாமல் செய்வதற்கு சதிகள் இடம் பெறுகின்றன.
எம்மை பொருத்த வரையில் எவரையும் அழித்து அதன் மூலம் அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை,ஆனால் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த பணியினை செய்கின்றது.மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் எதற்காக இந்த கட்சியினை உருவாக்கினாரோ,அதற்காக மூதுார் மக்கள் எவ்வாறு உரமாக இருந்தீர்களோ,அது போன்று இன்று எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நீங்கள் அலை அலையாக இங்கு வந்திருப்பதை பார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நாம் திடீர் தௌபீக் அவர்களுக்கு தேசிய பட்டியலில் இடம் தருவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்க மாட்டோம்,அதனை தற்போதைய நிலையில் அதனை செய்ய முடியாது,ஆனால் அடுத்த மாகாண சபை தேர்தலில்
அவரை களமிறக்கி இந்த பிரதேச மக்களின் பிரதி நிதியாக மாற்றி அவர் மூலம் எல்லா அபிவிருத்திகளையும் கொண்டுவருவோம்.
மூதுார் மக்கள் அன்று இடம் பெயர்ந்து கந்தளாய்க்கும் ஏனைய பகுதிகளுக்கு ம் வந்த போது அந்த மக்களை கவனித்து அவர்களை மீள்குடியேற்றம் செய்த பொறுப்பை நான் ஏற்று செயற்படுத்தினேன்.அந்த வகையில் இந்த மக்களிடம் வந்து வாக்குகேட்க எனக்கு உரிமை இருக்கின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி அமையவுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் ஆட்சியில் இந்த மூதுார் மக்களின் தேவைகள் தொடர்பில் உறுதியான உடன்படிக்கையினை நாம் செய்து அதனை பெற்றுத்தருவோம் என்று கூறிய தேசிய தலைவரும் அமச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.