Breaking
Mon. Dec 23rd, 2024

-தில்ஷான் மொஹம்மத்-

சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2012/05/28) மியன்மாரில் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பின்னர் பெருன்பான்மை பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் இனக்கலவரம் உலக செய்திகளில் முக்கிய இடம் பிடிக்கிறது.

மியன்மார் அரசு ஆதரவுடன் கூடிய ஓர் திட்டமிடப்பட்ட கடுமையான வன்முறை ரோஹிங்கியா மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பல கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த கோரச்சம்பவத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன இலங்கை உட்பட உலகம் பூராகவும் அன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

(தற்போது பகிரப்படும் பெரும்பான்மையான புகைப்படங்கள், வீடியோக்கள் 2012ஆம் ஆண்டு கலவரத்தில் எடுக்கப்பட்டவை என்பதை கவனிக்கவும்).

இதே காலகட்டத்தில், ஆச்சரியம் என்னவென்றால் இலங்கையின் பெருன்பான்மை பௌத்தர்களாலும் மியன்மாரில் முஸ்லிம்களால் பௌத்தர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று இதே புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.

அதாவது ஒரேவகையான புகைப்படங்களுக்கு இருவகையான உரிமைகோரல்கள்.
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடந்த கொடூரங்களின் தாக்கம், திடீரென வங்காளதேசத்தின் சிட்டகொன் நகாரத்தில் வெளிப்படுகிறது.

பர்மாவில் நடந்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் அங்கு ஒரு பௌத்த ஆலயம் முஸ்லிம்களால் தீ வைத்து கொளுத்தப்படுகிறது.

இது ஏற்கனவே ரோஹின்கியா முஸ்லிம்களின் புகைப்படங்களை தமக்கு சார்பாக பகிர்ந்துவந்த இனவாதிகளுக்கு அவல் கிடைத்த செய்தியாகிப்போனது . தீப்பற்றிய பௌத்த ஆலயத்தின் படங்களுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் இனவாதிகளால் சரமாரியாக பகிரப்படுகிறது.

முஸ்லிகளுக்கு எதிராக புதிது புதிதாக பல இனவாத பேஸ்புக் பேஜ்கள் உருவாக்கப்படுகின்றன.

இது நடந்து ஓரிரு வாரங்களில் கொழும்பில் பங்களாதேஷ் தூதுவராலத்திற்கு முன்னாள் பொதுபல சேனா எனும் அதுவரை கேள்விப்பட்டிராத ஓர் பௌத்த அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கின்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிரான கோசத்துடன் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்களாதேஷ் தூதுவராலயத்தை கற்களால் அடித்து சேதப்படுத்துகிரார்கள்.

இதன்பின்னர் பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளருமான ஞானசார முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பத்திரிகை மாநாடுகள் மூலம் நடத்தி பிரபல்யமாகிறார். இதன் பின்னர் நடந்தவை நாம் அறிவோம்.

2012 இல் கலவரத்துடன் ஆரம்பித்து, கடந்த மூன்று வருடங்களாக ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகள் கூட பறிக்கப்பட்டு, பர்மிய அரசினால் திட்டமிடப்பட்டு இனவழிப்பு செய்யப்படுகிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

இஸ்ரேலிய அரசினால் பலஸ்தீனியர்கள் இனவழிப்பு செய்யப்படுவதை போல, ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் யசீதிகள் இனவழிப்பு செய்யப்படுவதை போல, பர்மாவில் ரோஹிங்கியாக்கள் இனவழிப்பு செய்யப்படுகிறார்கள்.

எனினும் 2012 இல் நடந்தததை போல பெரும்கலவரம் நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் சர்வதேச ஊடங்கங்களில் அல்லது சர்வதேச மனித உரிமை மற்றும் தொண்டு நிறுவனக்களின் செய்திகளில் இல்லை.

ரோஹின்கியா முஸ்லிம்களின் பிரச்சினைகளில் நெருங்கி செயல்படும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்களின் செய்தி வெளியீடுகளில் கூட கலவரம் நடைபெற்றதற்கான எந்த அறிக்கைகளும் இல்லை.

எனினும் நெருக்குதலுக்கு உள்ளான ரோஹின்கியாக்கள் நாட்டைவிட்டு படகுகள் மூலம் வெறியேறி வருவதும், அந்த மக்களை பக்கத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக இருக்கிறது.

நான் ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், தற்போதைய சமூக ஊடகங்களின் போக்கினை அவதானிக்கும் போது, அடங்கி இருக்கும் இனவாத பேயை மீண்டும் தட்டி எழுப்பப்படும் போல இருக்கிறது.

பெரும்கலவரம் நடைபெற்றதை போல பழைய புகைப்படங்கள் புதிதாக பகிரப்படுவதும் பௌத்த மதத்தினை நிந்தனை செய்யும் பதிவுகளும் ஏன் பகிரப்படுகின்றன என்று புரியவில்லை.

வன்முறை நடைபெறாத நிலையில் இப்படியான உசுப்பேத்தல்கள் எதற்கு??

வில்பத்து பிரச்சினையில் இலேசாக தலையை நீட்ட எத்தனித்து மௌனித்து போன இனவாதிகளில் கையில் பொல்லை கொடுக்க நினைக்கிறோமா ??

வித்யாவின் கொலையில் பின்னர் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றங்களுக்கு கற்களை வீசிய சம்பவத்தையே மீண்டும் நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது, புலி வருகிறது என்று தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்தவர்கள் இந்த இனவாதிகள்.

இப்படியான நிலையில்,பொதுத்தேர்தல் ஒன்றை நாடு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மீண்டும் பர்மாவின் நிலையை வைத்து இனவாதத்தை தூண்டும் நிகழ்ச்சி நிரல்கள் ஏதும் அரங்கேறுகின்றவா ??

Related Post