ஜே.ஏ.ஜோர்ஜ்
‘உலக நாடுகளில் கடின சக்தியின் எதிர்விளைவுகள் அதிகரித்துள்ளதையடுத்து, மென் சக்தி மற்றும் அதன் தாக்கம் அண்மையகாலத்தில் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. இதனை அண்மையில் ஏற்பட்ட அரபு வசந்தத்தில் காண முடிகிறது. மென்மையான சக்தி பரவலாகியுள்ளதுடன் தேசிய வலிமைக்கான ஒரு முக்கியமான காரணியாக இப்போது மாறியுள்ளது’ எனப் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016’ இல் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
மென் சக்தி மற்றும் உலகளாவிய ரீதியில் அதன் தாக்கம் தொடர்பில் 6ஆவது பாதுகாப்பு மாநாட்டில் (இம்முறை) ஆராய்கின்றோம். மென் சக்தியின் வலியுறுத்தல் அல்லது ஈர்ப்பு மூலம் மற்றவர்களின் நடவடிக்கைகளின் தாக்கம் என்பன தொடர்பில் தகவல் மற்றும் சிந்தனைக்கான பரிமாற்றங்களுக்கு இது உதவியாக அமையும்.
இந்த ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு மிக முக்கியமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் தேசிய பாதுகாப்பு பேரவை ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சிந்தனையின் கீழ் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த 7 ஆண்டுகளுக்கு பின்னரும் அது தொடர்பான அறிவினை, நிபுணத்துவத்தை சர்வதேசத்துடன் பகிர்ந்துக்கொள்வதன் ஊடாக, ஐ.எஸ் போன்ற தீவிரவாத சிந்தனைகளின் அச்சுறுத்தலில் இருந்து உலகத்தை அமைதியடையச் செய்ய முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக நாடுகள் மற்றும் சர்வதேச ரீதியில் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்று மனிதர்களின் பாதுகாப்புக்கு பாரம்பரியம் மற்றும்; பாரம்பரியம் அல்லாத முறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் உலகளாவிய ரீதியின் இன்று விவாதப்பொருளாக மாறியுள்ளன.
பங்களாதேஷ் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மோதல்கள், கிளர்ச்சிகள் பயங்கரவாத சித்தாந்தங்களை தோற்கடித்துவிடும் வகையில் அமைந்துள்ளன.
வசப்படுத்தும் சக்தியானது 19 வயதுடைய மலாலா என்று யுவதியை பயங்கரவாதத்துக்கு எதிராக சிந்திக்கத்தூண்டியது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை மக்கள் ஊடாக நகர்த்த முடிந்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு கவர்ச்சியான எண்ணக்கருவை அது ஏற்படுத்தியுள்ளது. அதிகமான மக்கள் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்.
கடும் பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும் தீவிரவாதம் போன்ற சக்தியுடன் அதிகாரம் இல்லாத மென் சக்தி போராடும். ஆகவே, கடின சக்தி மற்றும் மென் சக்தி என்பன கலந்த ‘ஸ்மார்ட் சக்தி’தான் இதற்கான மிகச்சிறந்தத் தீர்வாக அமையும்’ என்றார்.
‘உதாராணமாக, இரண்டாம் உலகப்;போருக்கு பின்னரான சுதந்திர ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் உலகலாவிய ரீதியில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்த இந்த மென் சக்தி முக்கியமாக அமைந்தது. அமெரிக்காவின் கல்வி, கலாசாரம், ஏனைய நாடுகள் அதனை பின்பற்றும் தன்மை எல்லாம் மென் சக்தி மூலோபாயத்தின் விளைவு’ என அவர் சுட்டிக்காட்டினார்.
‘2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜீங் பிங், மென் சக்தியின் அளவை அதிகரித்தமை மற்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தமை, உலகுக்கு சீனா சொல்லும் சிறந்த தகவலாக அமைந்ததுடன் ‘சீன அச்சுறுத்தல்’ என்பது குறித்து உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக சீனாவை மாற்றியுள்ளது.
இலங்கை தனது கலாசாரம், வெளியுறவு கொள்கையில் மென் சக்தியை அடிக்கடி பயன்படுத்தும். இலங்கையை பொறுத்த வரையில் உலக நாடுகளுடன் சமநிலையான ஒரு வெளியுறவு கொள்கை இருப்பதை காணமுடியும். இதற்கு மென் சக்தி மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
இலங்கை மொழி, சமயம் என்ற ரீதயில் பன்முக கலாசாரம் கொண்ட நாடாக இருந்தாலும் அவற்றுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாம், வரலாற்று ரீதியான அனுபவங்களை கொண்டுள்ளோம். யுத்தத்துக்குப் பின்னர் சமரசம், மறுவாழ்வு, இராணுவ உதவி அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் போன்றவை இன்றியமையாதவையாகும்.
மேலும், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் மனிதாபிமான உதவி வழங்குவதில் நாம் முன்னின்று வருகின்றோம்’ என்றார்.