முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற காணி விற்பனையொன்று தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரான சிங்கப்பூர் சரத் என்பவரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர்.
ஒரு காணித்துண்டு 25 லட்சம் ரூபா வீதம் 31 காணித்துண்டுகள் இவ்வாறு போலி உறுதிப்பத்திரத்தின் மூலம் விற்கப்பட்டுள்ளது. இதனைக் கொள்வனவு செய்தவர்களும் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரி களனி பிரதேச சபையின் முன்னாள் அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்று இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
போலி உறுதிப்பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்ட காணியை மீண்டும் பிரதேச சபைக்கு பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.