புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,
நீதிமன்றில் குறித்த மாணவியின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ரஞ்ஜித்குமார் இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் பிரகாரம் குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளனரா? என்றும்,
குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதா? என்றும் நீதிவானிடம் வினவியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதிவான் குறித்த வழக்கின் விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களமே மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
மேலும் உதாரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி இவ் வழக்கிலும் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய குற்றவாளிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.
இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் மாதம் பத்தாம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.