ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டதை யடுத்து, கட்சித் தாவல்கள் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் நேற்றுவரை ஆளும் மற்றும் எதிரணியிலிருந்து 25 எம்.பிக்கள் மற்றும் 314 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 339 பேர் கட்சிதாவியுள்ளனர்.
அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்துடன், ஆளுந்தரப்பிலிருந்து நேற்றுவரை 23 எம்.பிக்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ள நிலையில், எதிரணியிலிருந்து 2 எம்.பிக்கள் ஆளுந்தரப்புக்குத் தாவியுள்ளனர். கட்சித் தாவல்களின் அடிப்படையில்எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே பெரும்பான்மையான அரசியல்வாதிகள் தாவியுள்ளனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சித் தாவல், நேற்று முஸ்லிம் காங்கிரஸ்வரை தொடந்துள்ளது. தேர்தலுலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கட்சித் தாவல்கள் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுவரையில் மைத்திரிபால சிறிசேனவுடன் 295 பேர் இணைந்து கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுடன் 44 பேர் இணைந்துள்ளனர்.
அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, நவீன் திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க, ரிசாத் பதியூதின், சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, திகாம்பரம், இராகிருஷ்ணன் மற்றும் எம்.பிக்களான வசந்த சேனாநாயக்க, இராஜதுரை, உனைஸ் பாருக், ரஜீவ விஜேசிங்க, அதுரலிய ரதன தேரர், அமீர் அலி ஆகிய 15 எம்.பிக்கள் எதிரணியிலனைந்தனர். இந்நிலையில், நேற்று முஸ்லிம் காங்கிரஸின் 8 உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேறினர்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பUர் சேகுதாவூத், எம்.பிக்களான அஸன் அலி, அரிஸ், பைஸல் காஸிம், அஸ்லம், தெளபீக், முத்தலிக் பாபா ஆகியயோரே நேற்று எதிரணியில் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்தகெட்டகொட உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.