Breaking
Thu. Dec 26th, 2024
அனைத்துக் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டின் எதிர்காலம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் பற்றி கலந்துரையாடக் கிடைத்துள்ளமை இந்த நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளும் கூட்டாக செயற்படுவதைப் பொறுக்காத சக்திகள் இதனைச் சீர்குலைக்க பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானாலும் பாராளுமன்ற அதிகாரத்தை விஞ்சி ஒரு அடிகூட முன்னாள் நகர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மோசமான யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட பயணம் ஒன்று எதிரே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடனேயே இப்பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
ராஜகிரியிலுள்ள ‘சந்தஹன் செவன’ சர்வதேச பெளத்த ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
‘ஹெல உறுமய’ கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டீ சில்வா உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
நாம் பல தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. மாற்றமொன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளது. இதற்காக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டியுள்ளது.
எமது நாட்டில் கட்சிகள் பிளவுபட்டு சிதைக்கப்பட்டிருந்த காலத்திற்கு முடிவு கட்டி வன்முறை தேர்தல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் மனதை வெற்றி கொள்ளும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தேசிய அரசாங்கம் என்ற சிந்தனை தற்போது எழுந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நல்லதும் கெட்டதுமான அனுபவங்களோடு நாம் பயணித்துள்ளோம். மோசமான அனுபவங்களைக் கொண்ட காலங்கள் நாட்டின் பின்னடைவுக்கே வழி வகுத்தன.
நாடு தொடர்பில் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க முற்படுகையில் அதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பு இத்தகைய நிலையொன்றே இங்கு காணப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை நாம் இணைத்துச் செயற்பட்ட போது எமக்கெதிராக மிக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாம் நாட்டைப் பிரிக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மிக மோசமாக எங்களை விமர்சித்தார். தற்போது அவருக்கெதிராக குற்றப்புல னாய்வுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நானும் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டதாகவும் போலியான அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். எனினும் இவற்றில் மக்கள் புத்திசாலிகளாகச் செயற்பட்டனர்.
அனைத்துப் பொய்ப்பிரசாரங்களையும் மக்கள் நிராகரித்தனர்.
தேசிய அரசாங்கமொன்று உருவாவது நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் அங்கீகரித்தனர்.
இந்த வெற்றியின் பின்னர் முக்கியமான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஐ.தே.க.வும் ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
எத்தகைய மட்டுப்படுத்தப்படாத நிறைவேற்று அதிகாரம் இருந்த போதும் பாராளுமன்ற அதிகாரத்தை விஞ்சி ஒரு அடி கூட முன்னாள் நகர முடியாது என்பதை சிலர் உணராமல் செயல்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததோடு ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக் கிடையில் கிராம மட்டத்தில் சில வதந்திகள் இடம்பெற்றன.
நாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகி எதைச் செய்ய முற்படுகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியினர் சிந்தித்தனர். அதேபோன்று தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் மாறி சிந்தித்தனர்.
நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டின் நலனை முன்னிறுத்தி கலந்துரையாடுவார்களானால், நாட்டின் சவால்களுக்கு ஒன்றிணைந்து முகம் கொடுக்க முன்வருவார்களானால் அது இந்த நாட்டின் அதிஷ்டம் என்பதாகவே நான் குறிப்பிடவிரும்புகின்றேன். இந்த கூட்டிணைப்பை சிலர் விரும்பவில்லை. எனினும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மக்கள் எதிர்பார்ப்பை நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதே எமது எதிர்கால கடமை.
வராற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை மக்கள் பெற்றுத்தந்துள்ளனர். ஒருவரை யொருவர் தாக்கி, படுகொலை செய்து, அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் பிளவுபட்டு நின்ற மோசமான யுகத்துக்கு முடிவு கட்டும் காலம் உருவாகியுள்ளது.
எமது செயற்பாடுகளுக்கு எவராவது தடையாக செயற்படுவார்களானால் அவர்கள் பரிவினையையும், தாக்குதல் படுகொலை வன்முறை நிரம்பிய தேர்தல்களையும் அங்கீகரிப்பவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மிலேச்சத்த னத்தில் ஊறிப்போனவர்கள் என்றே குறிப்பிட நேர்கிறது.
மிலேச்சத்தனம் வன்முறையை அங்கீகரிக்கின்றவர்கள் விலங்குகள் போன்றவர்கள் அஹிம்சை, நேர்மை, நீதியை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து மக்கள், சகல இன சமூகத்தினரதும் ஆசீர்வாதத்துடன் நாம் நாட்டிற்கான பயணத்தை பலப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சிலருக்கு இந்த ஏற்றுமை பொறுக்கவில்லை. இந்த கூட்டை சிதைப்பதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
எனினும் தற்போதைய அரசியல் நிலமைகளுக்கிணங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மக்களது எதிர்பார்ப்புகளை தமக்கான பொறுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எமது பிரதான நோக்கமாகும். எமது நிகழ்ச்சி நிரல் ஒரு கட்சியினது நிகழ்ச்சி நிரலல்ல. தாய் நாட்டின் நலனை இலக்காகக் கொண்ட அனைத்து கட்சிகளினதும் நிரலாகும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் எமக்கு ஆதரவளிக்கின்றன. எனது நன்றியும் கெளரவமும் அக்கட்சிகளுக்கு உரித்தாகின்றது. அனைவரும் ஒன்றிணைந்து எமது இந்த பயணத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப் புடன் செயற்பட்டு வருகின்றனர்.
அதுரலிய ரதன தேரர் உட்பட பெளத்த மதத்தலைவர்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் எமக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த அரசாங்கத்தை அமைப்பதில் அவர்களது அர்ப்பணிப்புள்ள செயற்பாடு மிக முக்கியமானது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

Related Post