தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்வொரு வழியிலேனும் பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடையும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் இருந்திருந்தாலும், கட்சியை விட நாட்டை குறித்து சிந்தித்து ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
‘நான் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டிற்கு செல்லவில்லை. எனினும் தோல்வியடைந்து சென்ற மஹிந்த பதவி பேராசையில் மீண்டும் அதிகாரம் கிடைக்கும் என்ற பேராசையில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.’என்றார்.