இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் அவை வரவேற்கப்பட வேண்டியவை எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரச தலைவர்களுக்கு வழங்கிய விருந்துபசாரத்தில் இரண்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகை யில் அமைந்துள்ளதாக இதன்போது அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் யுத்த முடிவின் பின்னர் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும் என்பதனை நான் நம்புகின்றேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு உதவவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்த செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட் டுள்ளார்.