-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்-
தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புவாய்ந்த அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் எல்லாவைரையும் விட ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்சவின் உண்மையான நட்பு இவையெல்லாவற்றையும் துறந்து தாங்கள் வெளியேறி வந்ததை அங்கீகரிப்பது போல் பெரும் திரளான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாகவும் பெரும் திரளான இம்மக்களின் வருகையை தனக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய றிசாத் பதியுதீன்
தனது கட்சியில் உள்ள ஒருசிலரை விலைக்கு வாங்கி தனக்கும் எதிராக போலியான பிரச்சாரம் ஒன்று முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், தங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அற்ப சொற்ப சலுகைகளுக்காக கட்சியின் தீர்மானத்தை மீறி காத்தான்குடி மக்களை பிழையாக வழிநடத்திவிடக்கூடாது என்பதற்காக தான் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டு முதலாவதாக கிழக்கு மாகாணத்துக்கு வந்ததாகவும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தாங்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கையை செய்து வருகின்றார் என அறிந்தவுடன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்துக்குச் செல்லாமல் காத்தான்குடிக்கு வந்ததாகவும் அங்கு தங்களது கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாருக்கை சந்தித்து நிலைமையை விளங்கிக் கொண்டதாகவும் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாருக் தங்களது போராட்டத்துக்கு நூறுவீத ஒத்துழைப்பைத் தந்து உதவி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆட்சி செய்யக்கூடிய இன்னும் இரண்டு வருடங்களும் 160 பாராளமன்ற உறுப்பினர்களின் பலமும் இருந்த போதும் தான் பெரிய ஜாம்பாவானாக வாழக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கைவைப்பதை பார்த்துக்கொண்டு இருந்ததால் இறை தண்டனையாக அவர் இவை அனைத்தையும் துறந்து தேர்தல் ஒன்றுக்கு வந்து தற்போது திண்டாடி கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்களது கட்சிக்கு வாக்களித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்து தந்த மக்களைச் சந்தித்ததாகவும் அந்த மக்களை வினவிய போது அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசை விட்டு வெளியேறுமாறு தங்களை கேட்டுக் கொண்டதாகவும் அவர்களின் வேண்டுதல்களை மதித்து இந்த அரசை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இப்போது வரைக்கும் இந்த அரசுடன் மிகுந்த நெருக்கமாக இருந்து வந்த தாங்கள் நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டு வருவதில் முஸ்லிம் சமூகமும் பங்காளியாக இருந்ததற்கு சாட்சியாக தாங்களும் இருந்ததாகவும் யுத்த வெற்றிக்குப்பின் தனக்கு அரசுக்கு ஒத்துளைத்ததர்க்காக பலம்வாய்ந்த அமைச்சு ஒன்றையும் முன்று மாவட்டங்களுக்கு அபிவிருத்திக்குழுத் தலைமையை தந்ததாகவும் தெரிவித்தார்.
மேற்படி பதவிகளைத் தந்ததும் அதனை வைத்துக்கொண்டு மற்றவர்களைப்போல் தாங்கள் சும்மா இருக்கவில்லை என்றும் பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் செய்ததாகவும் தெரிவித்தார்.
இருந்த போதும் கடந்த இரண்டு வருடங்களாக பொதுபல சேனா என்றசிங்கள கடும்போக்கு அமைப்பினால் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை தங்களால் தாங்க முடியாது போனதாகவும் தெரிவித்தார். தம்புள்ளையில் ஆரம்பித்த இவர்களது அடாவடித்தனம் இன்றுவரைத் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கண்டிப்பதற்காக எதிரணியில் போட்டியிடும் மைத்திரி பாலசிறிசென அவர்களை தாங்கள் ஆதரிக்க தீர்மானித்ததாகவும் மைத்திரி பாலசிறிசென அவர்களது வெற்றிக்காக பாடுபடவுள்ளதாகவும் இலங்கை வாழ் இருபது லட்சம் முஸ்லிம்களுக்காக நாங்கள் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும் நடைபெறவிருக்கும் இத்தேர்தல் கல்முனைக்கோ, அக்கரைப்பற்றுக்கோ, சம்மாந்துறைக்கோ, காத்தான்குடிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் தேர்தல் அல்ல. இது எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் தேர்தலாகும். இதனை மனதில் நிறுத்தி முஸ்லிம் சமூகம் கட்சி பேதங்களை மறந்து மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.