ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தமிழ் உறவினர்களை பார்க்க மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்லாட்சி அரசாங்கத்தின் கவனிப்பும் அமோகமாகவுள்ளது.
ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்கறை கொள்ளாதிருக்கின்றாரென பொது பல சேனா அமை ப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா போகஸ்வெவ பகுதியில் சிங்கள குடியிருப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தற்போது இக்குடியிருப்பை சேர்ந்த மக்கள் உணவு, இருப்பிடம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமையினால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இம்மக்களுக்கு இதுவரையில் காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை. இவர்கள் உறுதிப்பத்திரங்கள் கோரி அரசாங்க அலுவலகங்களுக்கு செல்லும் போது தமிழ் மாகாண சபை உறுப்பினர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவை அரசியல் பிரச்சினைகள் அல்ல மனிதாபிமானம் சார்ந்த பிரச்சினைகள் என ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண் டும். இப்போதும் யார் இனவாத போக்கில் செயற்பாடுகின்றார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளமால் இருப்பது வருந்தத்தக்கது. தற்போது எமது நாட்டில் தமிழ் பிரிவினை வாத குழுக்கள் அதிகமாக உருவெடுக்கின்றன. கடந்த அரசாங்கம் அவர்களுக்கு அஞ்சாமல் சிங்கள மக்களுக்கு சேவை செய்தது. இராணுவத்தினரின் உதவியையும் பெற்றுக்கொடுத்தது. ஆனால் தற்போது சிங்கள மக்கள் வவுனியா உள்ளிட்ட தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலிருந்து வெளியேறிச் செல்கின்றனர்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் இம் மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே எதிர்காலத்திலாவது இவர்கள் மீது கவனம் செலுத்துங்கள் என்று ஆட்சியார்களை வலியுறுத்துகின்றோம். வடக்கின் தமிழ் உறவுகளை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதம் ஒருமுறையாவது யாழ்ப்பாணம் செல்கின்றார். வடக்கின் தமிழ் மக்களை ஜனாதிபதி தான் சென்று பார்க்க வேண்டும் என்ற கட்டாய தேவை இல்லை. ஏனெனில் வடக்கின் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றனர். அதேபோல் கிழக்கில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கான அரசியல் வாதிகள் உள்ளனர். இவ்வாறிருக்க தெற்கின் சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கே குரல் கொடுக்கின்றனர். அவ்வாறாயின் சிங்கள மக்களை கவனிக்கப் போவது யார் என்பது கேள்விக்குறியான விடயம். அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை பார்த்தாவது சிங்கள அரசியல் தலைமைகள் மக்களுக்கு சேவை வழங்க முன்வர வேண்டும்.
மறுபுறம் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வடக்கின் தமிழ் மக்களை மீள் குடியமர்த்துவதற்கான பிரதிநிதியாக மட்டுமே செயற்படுகின்றார். அவருக்கு மற்றைய இனத்தவர் தொடர்பில் அக்கறை இல்லை என்பதை அவரின் செயற்பாடுகள் ஊடாக காணமுடிகின்றது. இவ்வாறிருக்க சிங்கள மக்கள் உதவி கோரும் போது ராஜபக் ஷக்களிடம் கேளுங் கள் என்பவர்கள் தமிழ் மக்கள் கேட்காத உதவிகளையும் வடக்கிற்கு சென்று செய்து கொடுக்கின்றமை வேடிக்கையானது என்றார்.