நாட்டின் தேசிய ஒற்றுமையைக் காப்பாற்றி, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் எமது ஒவ்வொரு நடவடிக்கையையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தலைமையில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாகவே பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அரசியல் பிரச்சினை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குரிப்பிட்டார்.
இவை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தலைமைத்துவம் இன்று ஒரு கட்சி சார்ந்ததாக மட்டுமே தங்கியில்லை. பிரதான இரண்டு கட்சிகளின் தலைவர்களிடமும் நாட்டில் அதிகாரமும், அபிவிருத்தி நடவடிக்கைகளும் தங்கியுள்ளன நாட்டில் ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியான எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார். அதேபோல் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அவ்வாறு இருக்கையில் பிரதான இரண்டு கட்சிகளும் நாட்டை சரியாக வழிநடத்த வேண்டிய கடமை உள்ளது.
அதேபோல் நாட்டிற்கு எதிராக எழுந்துள்ள அழுத்தங்களை சமாளிக்கவும் அவற்றில் இருந்து நாட்டை விடுவிக்கவும் நாம் இரண்டு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு கட்சிகளினாலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றன. அதேபோல் எமது ஆட்சியிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளன. அவை இரண்டும் நாட்டுக்கு எதிரான அழுத்தங்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்துள்ளன.
மேலும் கடந்த காலங்களில் எமது இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவை தொடர்பில் இன்றும் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே அவற்றையும் வெற்றிகொண்டு நாட்டையும் எமது இராணுவத்தையும் காப்பாற்ற வேண்டும். அதேபோல் சிறுபான்மை மக்களின் மனங்களையும் வென்றெடுக்க வேண்டும். அதற்கான காலகட்டத்தில் தான் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றினது நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது.
ஆகவே இந்த கூட்டணி ஆட்சியில் இப்போதே பல சவால்களை வெற்றிகரமாக சமாளித்து வந்துள்ளோம். உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் தொடர்பில் விமர்சிக்கும் அளவில் எந்தவித மோசமான நிலைமைகளும் தற்போது இல்லை. அதேபோல் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் இலங்கை தொடர்பிலான சர்வதேச தலையீடுகளும் வெற்றிகொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் எதிர்வரும் காலத்திலும் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் வகையில் ஆட்சியை முன்கொண்டுசெல்ல நாம் தயாராகவே உள்ளோம். அடுத்து வரவிருக்கும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும், ஜக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் தனித்தனியே போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டாலும் மக்களுடைய பலத்தினையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் மற்றும் நாடாக எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைகளில் பிரதான இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவோம்.
கேள்வி :- அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வாறு கையாளப்படும்?
பதில்:- தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும் நாட்டின் தேசிய ஒற்றுமையை காப்பாற்றி ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையிலேயே எமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்.
கேள்வி :- அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளீர்கள்?
பதில்:- அரசியல் கைதிகள் என்று இலங்கை சிறைகளில் யாரும் இல்லை. யுத்தத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட தமிழ் கைதிகள் உள்ளனர். அவர்கள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பபட்டுள்ளது. அதேபோல் குற்றவாளிகள் அல்லாத நபர்களை விடுவிப்பதில் எம்மிடையே எந்த முரண்பாடுகளும் இல்லை. எவ்வாறு இருப்பினும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் வேறு குழுவை நியமித்துள்ளது. அவர்கள் இந்த விடயங்களை கையாள்வார்கள்.
கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் தற்போது எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- சிலவிடயங்களில் அவரை எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது. யுத்தத்தை வென்ற தலைவர். அதேபோல் நாடு இன்று நல்ல நிலைமையில் உள்ளதெனின் அதில் அவரின் பங்கும் அதிகமாகவே உள்ளது. எனினும் மக்கள் இன்று அவரை நிராகரித்துள்ளனர். அதேபோல் அவர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.