கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மம்மி துறவி சடலமானது கால்நடைகளின் தோலினால் போர்க்கப் பட்டும் பத்மாசனத்தில் உட்காந்திருப்பது போன்ற நிலையிலும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது.
ஏற்கனவே இத்துறவி மம்மி ஒரு மர்ம நபரால் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதற்காகத் திருடப் பட்டிருந்த நிலையில் மீட்கப் பட்டிருந்தது. தற்போது இந்த மம்மி எவ்வாறு மிக நீண்ட காலத்துக்கு இவ்வாறு பழுதடையாது உள்ளது என்பது குறித்துத் தடயவியல் பரிசோதனைகள் ஆரம்பமாகி உள்ளன. சிலர் இந்த மம்மி இவ்வளவு நாள் பழுதடையாது இருக்க மிகக் குளிர்மையான காலநிலையே காரணம் என்று கருதி வரும் நிலையில், திபேத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் குடும்ப மருத்துவரான டாக்டர் பர்ரி கெர்ஷின் என்பவர் இது பற்றி சைபீரியன் டைம்ஸ் பத்திரிகைக்குக் கூறுகையில் இந்த மம்மி துறவி ‘துக்டம்’ (tukdam) என்ற மிக அரிய வகைத் தியான நிலையில் இன்னமும் இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த ஒரு தியானியும் தொடர்ந்து துக்டம் தியானத்தில் நீடித்தால் அவரால் இன்னொரு புத்தராக வர முடியும் எனவும் கெர்ஷின் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த மம்மி துறவி தடயவியல் நிபுணத்துவத்துக்கான தேசிய நிலையத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. இந்த மம்மியின் அடையாளம் இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை என்ற போதும் சிலர் இது முன்னால் சோவியத் யூனியனின் புர்யட்டியாவைச் சேர்ந்த ஆசிரியரான லாமா டாஷி-டொர்ஷோ இட்டிஜிலோவ் உடையதாக இருக்கலாம் என அபிப்பிராயப் படுகின்றனர்.
1927 ஆம் ஆண்டு இட்டிஜிலோவ் தனது மாணவர்களுக்குத் தான் இன்னும் சில நாட்களில் இறக்கப் போவதாகக் கூறியதுடன் பத்மாசன வடிவில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து மரணித்ததாகவும் வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. இவரின் மம்மி வடிவிலான சடலம் 2002 இல் அகழ்ந்து எடுக்கப் பட்ட போதும் இன்னமும் பழுதடையாது இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளதுடன் மொங்கோலியாவில் உள்ள பௌத்தக் கோயில் ஒன்றில் வழிபாட்டுக்காக வைக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.