Breaking
Tue. Jan 14th, 2025

பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்து விடும் என்று அச்சப்படுகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட, முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, வாழைச்சேனை, கோழிக் கடை வீதியில் (06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இந்த நாட்டில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்திருக்கின்றது. இந்த நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பயம், அச்சம் இருந்ததில்லை. ஆனால், இம்முறை நடைபெறுகின்ற தேர்தலில், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயம், அச்சம் இருக்கின்றது. விசேடமாக முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இருக்கின்றது.

எதிர்வரவுள்ள பாராளுமன்றத்தில் இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை, தமிழர்களை, விசேடமாக முஸ்லிம்களை எவ்வாறு கையாளப்போகின்றார்கள்? என்பதிலே எங்களுக்கு பயம் இருக்கின்ற காரணத்தினால், இவர்களின் கையாளுகை எப்படி வரப்போகின்றது? என்று ஆரூடம் கூற முடியாத காரணத்தினால் நாங்கள் அச்சப்படுகின்றோம். ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை என்ன செய்யப் போகின்றார்கள்? அதனடிப்படையில், இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடுகின்ற  சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் அச்சப்படுகின்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய விலாசத்தினை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்றோம்.

இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினை அடக்கி, ஒடுக்கி விட வேண்டும் என்பதே இவர்களது நீண்டநாள் அபிலாசையாக இருக்கின்றது. கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால்,  அதனைக் காரணம் காட்டி, முஸ்லிம் சமூகத்தினையும் ஒடுக்கி விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

பயங்கரவாதி சஹ்ரான் கைது முடிந்துவிட்டது. எனினும், இந்தப் பொதுத் தேர்தலில் அதிகப்படியாக சிங்கள பகுதியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, “அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்” என்று சொல்வதற்காக, இப்போது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தைப்படுத்துகின்றார்கள்.

இவர்களது தமிழ், முஸ்லிம் ஒப்பந்தகாரர்கள் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனத்தினை குறைக்க வியாழேந்திரன் போன்றவர்களை களமிறக்கியுள்ளனர். இது தமிழ் மக்களின் ஆசனத்தினை குறைக்க வேண்டும் என்பதற்காகவே. அதுபோன்று, முஸ்லிம் ஆசனத்தினை குறைப்பதற்கு சகோதரர் ஹிஸ்புல்லா மற்றும் பசீர் சேகுதாவூத் இருவரையும் களமிறக்கியுள்ளனர். அம்பாறையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு அதாவுல்லா, மயோன் முஸ்தபாவின் மகனையும் களமிறக்கியுள்ளனர். முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து,  வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆசனங்களை குறைக்க வேண்டும் என்பதே இவர்களது திட்டம்.

ஜனநாயக உரிமை என்பது, உங்களது கருவையும் விட மேலானது என்பதை மறந்துவிடாதீர்கள். கர்ப்பை எவ்வளவு மதிக்கின்றீர்களோ, உங்களது “வாக்குரிமை” அதைவிட உச்சமானது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையிப், சட்டத்தரணி எம்.ராசிக், மத்திய குழு செயலாளர் ஏ.அக்பர் மற்றும் கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Post