Breaking
Mon. Jan 13th, 2025

தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் செயற்படுகிறார்கள். இதன் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முயற்சிக்கிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை  வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப்  தெரிவித்தார்.

கிண்ணியா, மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை கொரோனா என்ற போர்வையில் எரித்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கின்ற போதும், இந்த நாட்டு ஜனாதிபதி அதை ஏற்கவில்லை. ஏன் மறுத்தார்கள்? நிலையியல் கட்டளை சட்டம் கூட தெரியாதவர்களே நாட்டினுடைய தலைவனாக இருப்பது பெரும் கேள்விக்குறியாய் உள்ளது. முஸ்லிம் சமூகம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், ஷரீஆ சட்டங்களை பின்பற்றி வாழ்கின்ற, சமூக கட்டமைப்பின் சட்டங்களை, விவாக சட்ட மூலத்தை மாற்றுவதற்கு அத்துரலிய போன்றோர்கள் முற்படுகிறார்கள்.

திருகோணமலையில், மொட்டுக் கட்சியில் கோடாரிக் காம்புகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு வாக்களித்தால் அது இனவாதிகளின் கையை ஓங்கச் செய்யும். சிறுபான்மை இனத்துக்கு சொந்தமான நிலங்களை கபளீகரம் செய்யவும், நாட்டை துண்டாடவும் நினைக்கிறார்கள். எமது மாவட்டத்தில் உள்ள அரிசி மலை, 64 ம் கட்டை, கஜூகம, சேனாவெளி குளம், சுண்டியிறு போன்ற பகுதிகளில் நிலங்களை அபகரிக்க முற்படுகிறார்கள். இதனை எந்த பிரேரனை மூலம் கொண்டு வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, கடந்த காலங்களில் எம்மை நோக்கிய அம்புகள் பிரேரணைகளாக வந்த போதும், உரிமைக் குரலாய் ஒழித்தோம். இதனை மீண்டும் கண்ணியப்படுத்த வேண்டும். சமூகத்தின் அபிலாஷைகளை வெல்லக் கூடியவர்களை மக்கள் வெல்ல வைக்கவும் நாடாளுமன்றம் அனுப்பவும் வேண்டும். 1600 மில்லியன் ரூபாக்களில் அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். இது இப்படி இருந்தாலும் உரிமைகள் சலுகைகளை வென்றெடுக்க, உரிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாவட்டத்திலும் தேசியத்திலும் எமது வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத விழுமியங்கள் பொருளாதாரம் இப்படியானதொரு நிலைக்கு சமூகத்தை தள்ளிவிட்டார்கள். விகிதாசார முறை மூலம் சிறுபான்மையின சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு எதிராக வெட்டுப்புள்ளிகள் ஐந்து வீதத்தை 12 வீதமாக மாற்ற விஜேதாச ராஜபக்ஷ பிரேரணை கொண்டு வந்தார். இதற்கு எதிராக கொதித்தெழுந்தோம். இப்படியாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து, இந்த பங்களிப்பில் அன்றே பிரதிநிதித்துவ உரிமைக்காக பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் செயற்பட்டோம்” என்றார்.

Related Post