Breaking
Sat. Nov 16th, 2024

– லக்ஷ்மி பரசுராமன் –

மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா நேற்று தெரிவித்தார்.

ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுள் அநேகமானவர்கள் தமிழர்களாக இருந்த போதும் ஒப்பந்தப் பத்திரங்கள் தமிழில் இல்லாமை கவலைக்குரிய விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக கோத்தபய ராஜபக்ஷவின் மேற்படி ஒப்பந்தங்களை ரத்துச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுத்த பணிப்புரைக்கமைய ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலாக இவர்களுக்கு ஒகஸ்ட் 17ம் திகதி முதல் இலவசமாக உறுதியுடன் கூடிய வீடுகள் வழங்கப்படுமென்றும் அவர் உறுதியளித்தார். சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ மக்களை தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியதன் மூலம் மனித உரிமையை மீறியது மாத்திரமன்றி அப்பாவி மக்களிடமிருந்து கொள்ளையடிக்கவும் முயன்றுள்ளார்.

போலி பெறுமானத்திற்கு வீடுகள் விற்பனை செய்வதனை தடுத்து நிறுத்த வேண்டிய அதேநேரம் அபிவிருத்தி வேலைகளுக்காயினும் மக்களை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தேசிய கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கத்தின் கீழ் விரைவில் பாராளுமன்ற சட்டமொன்று நிறைவேற்றப்படுமெனவும் அவர் கூறினார். கொழும்பு நகரின் ஒதுக்குப் புறங்களில் சுமார் 80-90 வருடங்களாக வாழ்ந்த மக்கள் பலவந்தமாக அந்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பாடசாலை புத்தகப் பைகள் தூக்கி ஏறியப்பட்டன. பெக்கோ இயந்திரங்கள் மூலம் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இவர்களுக்கு புது வீடுகள் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் பலர் இன்றும் பலகை வீடுகளிலேயே வாழ்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்திற்கும் மேலாக வீடு வழங்கும் நிகழ்வில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. 400 சதுர அடி வீடொன்றின் பெறுமானம் 25 இலட்சம் ரூபாவென 2013 ஒகஸ்ட் 08ம் திகதி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வீடு மின்சார, வீதி, மின் உயர்த்தி, தீயணைக்கும் கருவி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் 70 இலட்சம் ரூபாவாகுமென 2014 ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாம் தீவிரமாக ஆராய்ந்த போதே இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதம அதிகாரி அனைத்து வசதிகளுடனும் கூடிய 400 சதுர அடி வீடொன்றின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவென்றும் 500 சதுரஅடி வீடொன்றின் பெறுமதி 34 இலட்சம் ரூபாவாகுமென்றும் உறுதி செய்துள்ளார். ஒகஸ்ட் 17 முதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி வீடு வழங்க வேண்டுமென்பதே எமது பிரதமரின் கனவு. அதனை பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் அவர் நனவாக்குவார் என்றும் அவர் கூறினார்.

Related Post