Breaking
Sat. Dec 21st, 2024

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வரலாம் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள 4வது பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.  இதில் கலந்துகொண்ட சுப்ரமணியன் சுவாமி ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை இந்த நவம்பர் மாதமளவில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம் செய்வார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மத்திய அரசினாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்றும் மாநில அரசினால் அல்ல எனவும் சுவாமி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ளதாகவும், எனவே மாநில அரசுகளிடம் சரணடையப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தமிழ் நாட்டில் இடம்பெறும் போராட்டங்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை எனவும் சுவாமி கூறியுள்ளார்.

அத்துடன் கச்சைத்தீவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சுவாமி பதிலளிக்கையில், இந்திராகாந்தி ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழக அரசிடம் கலந்துரையாடவில்லை என்ற கருத்து தவறானது எனவும், கருணாநிதியிடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழ்நாட்டில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவசியம் ஏற்படின் அளிக்கப்படும் என சுப்ரமணியன் சுவாமி பதிலளித்தார்.

Related Post