திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 31 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. 69 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம், திரிபுரா என பல மாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. இங்கு பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள்.
எனவே இந்த வெற்றியை கண்டு பா.ஜனதா மிதப்பில் இருந்தாலும் நாம் மலைத்து விடக்கூடாது.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் 15 முறை இந்திய மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்து பிறகு விடுதலை செய்துள்ளது.
மீனவர்களின் படகை கைப்பற்றியுள்ளது. முன்பு நரேந்திர மோடி பேசும் போது இலங்கை ஒரு குட்டி தீவு இந்தியாவிடம் வாலாட்டுகிறது என்றும் மத்தியில் முதுகெலும்பு இல்லாத அரசு இருக்கிறது என்றும் பேசினார். இப்போது அவரால் ஏன் அவர்களை தடுக்க முடியவில்லை, இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.