Breaking
Mon. Dec 23rd, 2024
நான்கரை லட்சத்துக்கும் குறைவான சனத்தொகையை கொண்ட அழகிய தீவே மோல்டா.

இந்த மோல்டா தீவிலேயே இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மாத்திரமன்றி, பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற 53 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் முக்கிய இரண்டு பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இந்த மாநாடு மோல்டா தீவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மோல்டா தீவை  எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள் யார்?

பிரித்தானியாவின் இரண்டாவது எலிச்பத் மகாராணி மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன.

2015ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவான நிலையில், பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவிக்கு அவர் தகுதி பெற்றிருந்தார்.

கடந்த 10 மாதங்களில் இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அமைப்பிலும் அவர் நற்பெயருக்கு பாத்திரமாகியுள்ளார்.

இதன்பிரகாரம், பொதுநலவாய அமைப்பின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, தனது பதவியை நாளைய தினம் மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டிடம் ஒப்படைக்கவுள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவநிலை, கருத்து சுதந்திரம், நியாயம், பொறுப்புக்கூறல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய அமைப்பின் ஊடகவியலாளர்கள் மிகுந்த பெருமிதத்துடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மோல்டா நோக்கி பயணித்துள்ளார்.

அதேநேரம், பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக தெற்கு அபிவிருத்தி, சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் மோல்டா நோக்கி விஜயம் செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றிய பெருமை இலங்கைக்கு சாரும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

By

Related Post