Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஜப் எம் காசிம் –

தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் வேண்டுகோள் விடுத்தார். கல்வியமைச்சில் நேற்று மாலை (31.01.2107) அமைச்சர் அகிலவிராஜூடன் நடாத்திய சந்திப்பின் போதே அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அச்சங்கத்தின் தலைவர் அனஸ், தொழில் அதிபரும் கல்வி ஆர்வலருமான இல்ஹாம் மரிக்கார், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியின் போது மக்கள் காங்கிரசுக்கும் நல்லாட்சித் தலைவர்களுக்குமிடையிலான உடன்படிக்கையில் மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதமாக்க வேண்டுமென்ற விடயமும் உள்ளடக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிரதமரை சந்தித்து இந்த விடயம் பற்றி பிரஸ்தாபித்த போது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் எம்மிடம் உறுதியளித்தார் என அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு மௌலவி ஆசியர் நியமனத்தில் நேர்முகப்பரீட்சையில் சித்தியடைந்த ஒரு சிறு தொகுதியினருக்கே அது வழங்கப்பட்டது. அல் ஆலிம் பட்டத்தை முடித்து போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பலர் இன்னும் தொழிலின்றி அவதியுறுகின்றனர். சிலருக்கு வயதாகியும் விட்டது எனவே இன்னும் காலத்தை இழுத்தடிப்பது முறையானதல்ல என்று அமைச்சர் றிஷாட் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களைக் கேட்டறிந்த கல்வியமைச்சர் அகில விராஜ் இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையெடுப்பதற்காக கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் ஒருவரை இந்த விவகாரம் தொடர்பில் நியமித்து தனக்கு இரண்டுவார காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவரைப் பணித்தார். விரைவில் இந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

02

By

Related Post