Breaking
Thu. Nov 14th, 2024

மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும்  பணிபுரிந்தவர்.

அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும் வளர்த்துக்கொண்டவர். தொழிலாளர்களின் நன்மைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர். அதுமட்டுமன்றி பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் அவர் பங்கு கொண்டதனால் சிறைவாசங்களை அனுபவித்தவர். சர்வதேச நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் மாநாடுகளில் இலங்கையின் சார்பில் பங்கேற்று உலகத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் அவர் குரல் கொடுத்திருக்கின்றார்.

இன, மத பேதமின்றி அவர் பணியாற்றியதனால் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். 03 மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த போதும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் அடுக்கு மொழியில் பேசும் நாவன்மை கொண்டிருந்ததினால், மாற்று மொழிச்சகோதரர்களின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

காலஞ்சென்ற S.W.R.D. பண்டாராநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்தெடுப்பதில் அயராதுழைத்தவர். இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை பின்பற்றி வாழ்ந்ததுடன் இறைபக்தி கொண்டவராகவும் விளங்கினார்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, இறைவன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவானாக எனவும் பிரார்த்திக்கின்றேன்.

By

Related Post